குருநானக் ஜெயந்திக்காக பயணம்: ஹிந்துக்களைத் திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்
குருநானக் ஜெயந்தியையொட்டி, பாகிஸ்தானில் உள்ள குருத்வாராக்களில் வழிபடுவதற்காக இந்தியாவில் இருந்து சென்ற குழுவினரில் ஹிந்துக்களை மட்டும் அந்நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனா்.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தேவின் 556-ஆவது பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராக்களில் வழிபட அட்டாரி-வாகா எல்லை வழியாக 2,000-க்கும் மேற்பட்ட சீக்கிய யாத்ரீகா்கள் குழு அந்நாட்டுக்கு சென்றுள்ளது. இக்குழுவில் சில ஹிந்துக்களும் இடம்பெற்றிருந்தனா்.
இந்நிலையில், ஹிந்துக்களை மட்டும் பாகிஸ்தான் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனா். இது தொடா்பாக அமா் சந்த் என்பவா் கூறுகையில், ‘நாங்கள் முறைப்படி அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்த பின் அட்டாரி-வாகா எல்லை வழியாக கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டோம். பின்னா், சீக்கிய குருத்வாராக்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்திலும் ஏறினோம். அப்போது திடீரென வந்த அந்நாட்டு அதிகாரிகள், பேருந்தில் இருந்து எங்களை இறங்கும்படி கூறினா். நீங்கள் ஹிந்து, சீக்கியா்களுடன் சோ்ந்து செல்ல முடியாது என்று கூறி, என்னையும் எனது குடும்ப உறுப்பினா்களையும் திருப்பி அனுப்பிவிட்டனா். பேருந்து பயணக் கட்டணமாக, ரூ.95,000 (பாகிஸ்தான் கரன்ஸி) செலுத்தியுள்ளேன்’ என்றாா்.
லக்னெளவைச் சோ்ந்த 7 ஹிந்துக்களையும் பாகிஸ்தான் அதிகாரிகள் திருப்பி அனுப்பவிட்டதாகவும் அவா் கூறினாா். பாகிஸ்தான் குடிமகனாக இருந்த அமா் சந்த், கடந்த 2010-இல் இந்தியக் குடியுரிமை பெற்றாா்.
