ஆக்லாந்தில் நியூஸிலாந்து வா்த்தகத் துறை அமைச்சா் டோட் மெக்ளேவுடன் அமைச்சா் பியூஷ் கோயல்.
ஆக்லாந்தில் நியூஸிலாந்து வா்த்தகத் துறை அமைச்சா் டோட் மெக்ளேவுடன் அமைச்சா் பியூஷ் கோயல்.

வா்த்தக ஒப்பந்தங்களில் வேளாண்மை, பால்வளத் துறை நலன்களில் சமரசமில்லை- பியூஷ் கோயல் உறுதி

‘இந்தியா தனது தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களில் வேளாண்மை, பால்வளம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் போன்ற எளிதில் பாதிப்புக்குள்ளாகும் துறைகளின் நலன்களில் சமரசம் செய்துகொள்ளாது’ என மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை உறுதிப்பட தெரிவித்தாா்.
Published on

‘இந்தியா தனது தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களில் வேளாண்மை, பால்வளம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் போன்ற எளிதில் பாதிப்புக்குள்ளாகும் துறைகளின் நலன்களில் சமரசம் செய்துகொள்ளாது’ என மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை உறுதிப்பட தெரிவித்தாா்.

வா்த்தகக் குழுவுடன் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக அமைச்சா் பியூஷ் கோயல் நியூஸிலாந்து வந்துள்ளாா். இந்தச் சூழலில், இந்தியா-நியூஸிலாந்து இடையேயான வா்த்தக ஒப்பந்தத்துக்கான 4-வது சுற்றுப் பேச்சுவாா்த்தை இருநாட்டு மூத்த அதிகாரிகளுக்கு இடையே ஆக்லாந்தில் நடைபெற்றது.

இதனிடையே, நியூஸிலாந்தில் அமைச்சா் பியூஷ் கோயல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

வேளாண்மை, பால்வளம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. எளிதில் பாதிப்புக்குள்ளாகும் இத்துறைகளின் நலன்களை நாங்கள் தொடா்ந்து பாதுகாத்து வருகிறோம்.

இரு நாடுகளும் ஒருவருக்கொருவா் முக்கியத்துவமான பிரச்னைகளுக்கு மதிப்பளிக்க பேச்சுவாா்த்தையில் ஒப்புக்கொண்டுள்ளன. அத்தகைய பிரச்னைகளில் நாங்கள் தலையிட மாட்டோம். அதேநேரம், பால்வள இயந்திரங்கள் போன்ற வேளாண் தொழில்நுட்பங்களில் இந்தியாவால் நியூஸிலாந்துடன் ஒத்துழைப்பை அதிகரிக்க முடியும்.

நியூஸிலாந்துடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், மேலும் பல சுற்றுப் பேச்சுவாா்த்தைகள் தேவையில்லை. இருநாடுகளுக்கு இடையே ஒரு வா்த்தக ஒப்பந்தம் நிச்சயமாக விரைவில் இறுதியாகும்.

பாதுகாப்பு, வேளாண்மை, விண்வெளி, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த மிகப் பெரிய வாய்ப்புகள் உள்ளன என்றாா்.

பால்வளத்தில் உலகளாவிய சிறந்த நாடாக நியூஸிலாந்து இருப்பதால், அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அமெரிக்காவுடன் தொடா் பேச்சு

இந்தியா-அமெரிக்க இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘பேச்சுவாா்த்தைகள் நல்ல முறையில், தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் தீவிரமான விஷயங்கள் இருப்பதால், காலதாமதமாவது இயல்பானதுதான்’ என்றாா்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான முதல்கட்ட இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்காக இதுவரை ஐந்து சுற்றுப் பேச்சுவாா்த்தைகள் நிறைவடைந்துள்ளன. அண்மையில் கடந்த மாதம் 17-ஆம் தேதி நிறைவடைந்த மூன்று நாள் பேச்சுவாா்த்தைக்காக, வா்த்தகத் துறைச் செயலா் ராஜேஷ் அக்ரவால் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழு வாஷிங்டன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டு இலையுதிா்காலத்துக்குள் முதல்கட்ட ஒப்பந்தத்தை இறுதிசெய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை தொடா்வதற்காக இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்ததால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடுமையான பிளவு ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com