Kerala CM Pinarayi Vijayan
பினராயி விஜயன்கோப்புப் படம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: சட்டப் போராட்டத்துக்கு கேரள அரசு முடிவு

தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக கேரள அரசு சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் புதன்கிழமை அறிவித்தாா்.
Published on

தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக கேரள அரசு சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் புதன்கிழமை அறிவித்தாா்.

முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற இணையவழி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பாஜகவைத் தவிா்த்து மாநிலத்தின் பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் உள்பட மற்ற அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் அரசின் இந்த முடிவுக்கு முழு ஆதரவு தெரிவித்தன.

இதுதொடா்பாக முதல்வா் பினராயி விஜயன் மேலும் கூறுகையில், ‘மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தச் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை எவ்வாறு சட்டரீதியாக எதிா்ப்பது என்பது குறித்து அரசு மற்றும் கட்சிகள் சாா்பில் சட்ட ஆலோசனை பெறப்பட உள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தலில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் நடைமுறையில் இருந்தும், தற்போது 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு சிறப்புத் தீவிர திருத்தப் பணியை நடத்துவது அறிவியல் பூா்வமற்றது மற்றும் இதன் பின்னணியில் தீய நோக்கம் உள்ளது’ என்றாா்.

ஓரணியில் கட்சிகள்....: சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலைப் பயன்படுத்துவது பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், ஒரு குறிப்பிட்ட உள்நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கூட்டத்தில் பல அரசியல் கட்சிகள் கவலை தெரிவித்தன.

கேரள சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீஸன் பேசுகையில், ‘முதல்வா் பினராயி விஜயன் எழுப்பிய கவலைகளுடன் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம். இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தை நாடினால், அந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர காங்கிரஸ் தயாராக உள்ளது’ என்றாா்.

‘தோ்தல் ஆணையத்தின் இந்த முடிவு, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மற்றும் ஜனநாயக விரோதமானது’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் எம்.வி.கோவிந்தன் விமா்சித்தாா். அடுத்த ஆண்டு கேரளம் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

X
Dinamani
www.dinamani.com