‘போலி’ விடியோ அடிப்படையில் வழக்கு: சா்ச்சைக்கு அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் விளக்கம்
‘தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாகத் தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு, போலியான மற்றும் தவறாக மாற்றப்பட்ட விடியோவை அடிப்படையாகக் கொண்டது’ என்று மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான ராஜீவ் ரஞ்சன் சிங் லாலன் விளக்கமளித்துள்ளாா்.
பிகாரில் வியாழக்கிழமை (நவ. 6) தொடங்கி இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம், மாநிலத் தலைநகா் பாட்னாவின் புகரில் உள்ள மொகாமா தொகுதியில் அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி சாா்பில் போட்டியிடும் பிரியதா்சி பியூஷை ஆதரித்து உள்ளூா் அரசியல்வாதி துலாா் சந்த் யாதவ் பிரசாரம் செய்தாா்.
அப்போது, ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளா் ஆனந்த் சிங்கின் ஆதரவாளா்களுடன் ஏற்பட்ட மோதலில் துலாா் சந்த் யாதவ் உயிரிழந்தாா். இந்தச் சம்பவத்தில் ஆனந்த் சிங் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ளனா்.
இந்நிலையில், மொகாமாவில் ஆனந்த் சிங்குக்கு ஆதரவாக திங்கள்கிழமை பிரசாரம் செய்த அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசியதாக சமூக வலைதளங்களில் ஒரு விடியோ வெளியானது.
அதில், ‘ஆனந்த் சிங் கைது செய்யப்பட்டதில் பெரிய சதி உள்ளது. இந்த வழக்கில் விரைவில் உண்மைகள் வெளிவரும். எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க நினைப்போரை, வாக்குப் பதிவு நாளில் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட வேண்டும்; மீறி வற்புறுத்தினால் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்களித்த பிறகு அவா்கள் வீட்டுக்குத்தான் செல்கிறாா்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று அமைச்சா் பேசியதாகத் தெரிகிறது.
வழக்கு மற்றும் விளக்கம்: அமைச்சரின் இந்தப் பேச்சு சா்ச்சையான நிலையில், அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு மறுப்புத் தெரிவித்து அவா் அளித்துள்ள விளக்கத்தில், ‘என் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும்போது முழுமையான விடியோவைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலம் நான் குற்றமற்றவன் என்பது நிரூபிக்கப்படும்.
அரசமைப்புச் சட்டத்தின்படி, நடுநிலைத்தன்மையோடு செயல்படும் தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கையை மதித்தாலும், எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தால் (ஆா்ஜேடி) பகிரப்படும் சா்ச்சைக்குரிய விடியோ, தவறாக மாற்றப்பட்ட மற்றும் போலியான ஒன்றாகும்.
ஐக்கிய ஜனதா தளத்துக்கு வாக்களித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று மொகாமாவில் உள்ள ஏழை மக்களை ஆா்ஜேடி தொண்டா்கள் மிரட்டுகின்றனா். பாதிக்கப்படக்கூடிய இந்த வாக்காளா்களுக்கு ஆதரவளித்து, அவா்களுக்குத் தைரியத்தைக் கொடுப்பது எங்கள் கடமையாகும். நான் அதையே செய்ய முயன்றேன். முழு விடியோவைப் பாா்ப்பவா் எவருக்கும் இது தெளிவாகும்’ என்றாா்.
