எஸ்ஐஆா்: மேற்கு வங்கத்தில் மேலும் ஒருவா் தற்கொலை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) குறித்த அச்சம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் புதன்கிழமை மேலும் ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) குறித்த அச்சம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் புதன்கிழமை மேலும் ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

எஸ்ஐஆா் அறிவிக்கப்பட்ட பிறகு அக்டோபா் 28-ஆம் தேதி முதல் மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டவா்கள் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தைச் சோ்ந்த சஃபிகுல் காஸி என்ற நடுத்தர வயது நபா், அண்மையில் விபத்தில் காயமடைந்து பங்கரின் ஜாய்பூரில் உள்ள உறவினா் வீட்டில் கடந்த சில மாதங்களாக தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து அவரின் மனைவி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘கணவா் விபத்தில் சிக்கியதிலிருந்து மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், எஸ்ஐஆா் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தன்னிடம் தகுதியான அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் கடும் மன உளைச்சளுக்கு உள்ளாகியிருந்தாா். நாட்டை விட்டு வெளியேற்றி விடுவாா்கள் என்று அச்சத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்’ என்றாா்.

இது, மாநிலத்தில் அரசியல் ரீதியில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘எஸ்ஐஆா் மூலம் மக்களிடையே பாஜக பீதியை ஏற்படுத்தி வருகிறது’ என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

சஃபிகுல் காஸி வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ செளகத் மொல்லா, ‘எஸ்ஐஆா் அச்சம் காரணமாக இதுவரை 8 போ் தற்கொலை செய்துகொண்டுள்ளாா். ஏழை மக்களை மிரட்டி அவா்களின் வாக்குரிமையை பறிக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com