

பிகாரில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 64.66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.
243 பேரவை தொகுதிகளைக் கொண்ட பிகார் பேரவைக்கு இருகட்டங்களாக பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, முதல்கட்டமாக 18 மாவட்டங்கள் அடங்கிய 121 தொகுதிகளில் இன்று(நவ.6) வாக்குப் பதிவு நடைபெற்றது.
முதல்கட்டத் தேர்தலில் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா உள்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி 3.75 கோடி பேர் (64.66 சதவிகித வாக்குகள்) வாக்காளித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் வினோத் சிங் குஞ்சியால் தெரிவித்தார். மேலும், கடந்த 25 ஆண்டுகளில் அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காலை 6 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவில், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக வாக்களித்தனர். மொத்தமாக 45,341 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, சிம்ரி பக்தியார்பூர், மஹிஷி, தாராபூர், முங்கர், ஜமால்பூர் மற்றும் சூர்யாகர்ஹா சட்டப்பேரவை தொகுதியின் 56 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு 5 மணிக்கே நிறைவு பெற்றது.
அதிகபட்சமாக பெகுசராய் தொகுதியில் 67.32 சதவிகிதமும், சமஸ்திபூரில் 66.65 சதவிகிதமும் மாதேபுராவின் 65.74 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகின.
மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக நவ.11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. நவ. 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.