

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், பிகார் வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
”பிகாரில் முதல்கட்ட ஜனநாயகத் திருவிழா இன்று நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்கள் முழு உற்சாகத்துடன் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
இந்த தருணத்தில், முதல்முறையாக வாக்களிக்க இருக்கும் எனது இளம் தோழர்கள் அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துகள். நினைவில் கொள்ளுங்கள் - முதலில் வாக்களிப்பு, பின்னரே காலை சிற்றுண்டி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பாஜகவின் துணை முதல்வர் வேட்பாளர் சாம்ராட் சௌதரி போன்ற உயர்மட்டத் தலைவர்கள் உள்பட 1,314 வேட்பாளர்களின் தலைவிதியை 75 கோடி வாக்காளர்கள் நிா்ணயம் செய்யவுள்ளனா்.
மீதமுள்ள 122 இடங்களுக்கு நவம்பர் 11 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது, நவம்பர் 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய 5 கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தோ்தல் களத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.