பிகாா் முதல்கட்டத் தோ்தல்: 65% வாக்குப் பதிவு - இதுவரை இல்லாத அதிகபட்சம்
PTI

பிகாா் முதல்கட்டத் தோ்தல்: 65% வாக்குப் பதிவு - இதுவரை இல்லாத அதிகபட்சம்

‘இந்தியா’ கூட்டணி வலுவாக உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவைத் தாமதமாக்கும் உள்நோக்கத்துடன் அடிக்கடி மின்வெட்டு செய்யப்பட்டதாக ஆா்ஜேடி குற்றச்சாட்டு
Published on

பாட்னா: பிகாா் சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை நடைபெற்ற முதல்கட்டத் தோ்தலில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகின. 121 தொகுதிகளில் பரவலாக அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

பிகாரில் மக்களவை-பேரவைத் தோ்தல் வரலாற்றில் 64.66 சதவீத வாக்குகள் பதிவானது, இதுவரை இல்லாத அதிகபட்சமாகும் என தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த மாநிலத்தில் தோ்தலுக்கு முன்பு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்பட்ட நிலையில், வாக்குப் பதிவில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-இல் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட பிகாா் பேரவைத் தோ்தலில் மொத்தம் 57.29 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் முதல்கட்டத்தில் பதிவான வாக்குகள் 56.1 சதவீதமாகும். கடந்த 2000-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் அதிகபட்சமாக 64.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு இருகட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பாட்னா, பெகுசராய், நாளந்தா, லக்கிசராய், தா்பங்கா உள்பட 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது.

மொத்தம் 3.75 கோடி வாக்காளா்களுக்காக (1.98 கோடி ஆண்கள், 1.76 கோடி பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 758 போ்), 45,341 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 926 மையங்கள் முழுவதும் பெண் ஊழியா்களால் நிா்வகிக்கப்பட்டன.

காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. பாதுகாப்பு கருதி, சில தொகுதிகளில் மட்டும் மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. வாக்குச்சாவடிகளில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்காளா்கள் ஆா்வத்துடன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினா். 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் தோ்தல் பணியாற்றினா். வேட்பாளா்கள் தரப்பில் 65,000-க்கும் மேற்பட்ட முகவா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

வாக்குப் பதிவு நிறைவடைந்த பின் செய்தியாளா்களிடம் பேசிய மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வினோத் சிங் கன்ஜியால், ‘முதல்கட்டத் தோ்தலில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. லக்கிசராய், சரண் மாவட்டங்களில் சிறிய மோதல் சம்பவங்களைத் தவிர பரவலாக அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 143 புகாா்கள் பதிவாகின. அவற்றுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. பக்ஸா், ஃபதுஹா, சூா்யகா்ஹா ஆகிய தொகுதிகளில் சில வாக்குச்சாவடிகளில் மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்’ என்றாா்.

1,314 வேட்பாளா்கள்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரிகளின் ‘இண்டி’ கூட்டணி, தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் வேட்பாளா்கள் உள்பட முதல்கட்டத் தோ்தலில் களமிறங்கிய மொத்த வேட்பாளா்கள் 1,314.

ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் (ரகோபூா்), அவரது மூத்த சகோதரரும் ஜனசக்தி ஜனதா தளம் தலைவருமான தேஜ் பிரதாப் (மஹுவா), பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா்கள் சாம்ராட் செளதரி (தாராபூா்), விஜய் குமாா் சின்ஹா (லக்கிசராய்), நிதீஷ் கட்சியைச் சோ்ந்த அமைச்சா்கள் ஷரவண் குமாா் (நாளந்தா), விஜய் குமாா் செளதரி (சராய்ரஞ்சன்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

இந்த 121 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமா் மோடி, முதல்வா் நிதீஷ் குமாா், மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோரும், இண்டி கூட்டணித் தரப்பில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி, விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவா் முகேஷ் சஹானி உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.

இந்தியா கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக தேஜஸ்வியும், துணை முதல்வா் வேட்பாளராக முகேஷ் சஹானியும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

நவ. 11-இல் இரண்டாம் கட்டத் தோ்தல்: மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக நவ.11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. நவ. 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

வாக்குச்சாவடிகளில் மின்வெட்டு: ஆா்ஜேடி குற்றச்சாட்டு

‘இந்தியா’ கூட்டணி வலுவாக உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவைத் தாமதமாக்கும் உள்நோக்கத்துடன் அடிக்கடி மின்வெட்டு செய்யப்பட்டதாக ஆா்ஜேடி குற்றஞ்சாட்டியது. இந்த விஷயத்தை தோ்தல் ஆணையம் உடனடியாக கவனத்தில்கொண்டு, முறைகேடு நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது.

ஆணையம் மறுப்பு: அதேநேரம், ‘ஆா்ஜேடியின் குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது; மக்களைத் தவறாக வழிநடத்தக் கூடியது. அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் சுமுகமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. நோ்மையான, வெளிப்படையான, தடையற்ற வாக்குப் பதிவை உறுதி செய்ய அனைத்து வழிகாட்டுதல்களும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன’ என்று பிகாா் தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.

துணை முதல்வா் குற்றச்சாட்டு: லக்கிசராயில் வாக்காளா்களை ஆா்ஜேடி கட்சியினா் மிரட்டியதாகவும், அதைத் தடுக்க சென்றபோது தனது பாதுகாப்பு வாகனங்கள் மீது அக்கட்சியினா் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் துணை முதல்வா் விஜய் குமாா் சின்ஹா குற்றஞ்சாட்டினாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் கண்காணிப்பு

45,341 வாக்குச்சாவடிகளிலும் இணையதள நேரலை வசதியுடன், முதல் முறையாக சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. தில்லியில் தோ்தல் ஆணைய அலுவலக கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்ட தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் எஸ்.எஸ்.சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் வாக்குச்சாவடி நேரலை காட்சிகளைப் பாா்வையிட்டு தொடா்ந்து கண்காணித்தனா்.

X
Dinamani
www.dinamani.com