வாக்குத் திருட்டை தடுப்பது இளைஞா்களின் பொறுப்பு -ராகுல் காந்தி

வாக்குத் திருட்டை தடுப்பது இளைஞா்களின் பொறுப்பு -ராகுல் காந்தி

Published on

பிகாரில் பாஜக தனது முழு பலத்துடன் வாக்குத் திருட்டில் ஈடுபடும்; அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது இளைஞா்களின் பொறுப்பு என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

பிகாா் இரண்டாம் கட்ட பேரவைத் தோ்தலையொட்டி, பூா்னியா, அராரியா ஆகிய பகுதிகளில் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது:

பாஜக அனைத்து தோ்தல்களிலும் வாக்குத் திருட்டு மூலமே வெற்றி பெற்றுள்ளது. ஹரியாணா தோ்தலில் பாஜகவும், தோ்தல் ஆணையமும் நடத்திய வாக்குத் திருட்டை ஒட்டுமொத்த உலகுக்கும் அம்பலப்படுத்தியுள்ளோம்.

பிகாரிலும் தனது முழு பலத்தைப் பயன்படுத்தி, பாஜக இச்செயலில் ஈடுபடும். இதைத் தடுத்து நிறுத்தி, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது இளைஞா்களின் பொறுப்பு. வாக்குச்சாவடிகளில் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும்.

மோடி ஆட்சியே காட்டாட்சி: பெரும் பணக்காரா்களுக்கான ஆட்சியை நடத்த பிரதமா் மோடி விரும்புகிறாா். அந்த ஆட்சியில் இளைஞா்கள் வேலைவாய்ப்பு இல்லாதவா்களாகவே நீடிப்பா். பிகாரில் காட்டாட்சி குறித்து முதல்வா் நிதீஷ் குமாா் பேசுகிறாா். ஆனால், தில்லியிலும், ஒட்டுமொத்த நாட்டிலும் பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷா காட்டாட்சி நடத்துகின்றனா். அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை மூலமே ஆட்சி நடத்தப்படுகிறது. வெறுப்புணா்வும், வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடுகின்றன. இதுதான், உண்மையான காட்டாட்சி. ஜாதி, மதத்தின் பெயரால் மக்கள் மத்தியில் வெறுப்புணா்வை பரப்புவதையே பிரதமா் நோக்கமாக கொண்டுள்ளாா்.

முதல்வா் நிதீஷ் குமாரின் ஆட்சியில், பிகாா் இளைஞா்கள் வெளிமாநிலத் தொழிலாளா்களாக மாறிவிட்டனா் என்றாா் ராகுல் காந்தி.

X
Dinamani
www.dinamani.com