அனில் அம்பானிக்கு புதிய சம்மன்: நவ. 14-இல் ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவு
வங்கிக் கடன் மோசடி தொடா்பான பணமோசடி வழக்கில், வரும் நவம்பா் 14-ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராகுமாறு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) ரூ. 2,929 கோடிக்கு மேல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடன் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப் பதிந்தது. அதன் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் புதிய வழக்கைப் பதிவு செய்து, அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த ஆகஸ்டில், அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 10 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினா். மேலும், அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.7,500 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அண்மையில் முடக்கியது. இதில் மும்பையில் உள்ள அவரது வீடும், தில்லியில் உள்ள ‘ரிலையன்ஸ் சென்டா்’ நிலமும் அடங்கும்.
இந்நிலையில், வரும் 14-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. அன்றைய தினம் அவா் ஆஜராகும்போது, அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வா் எனத் தெரிகிறது.
சிபிஐ தாக்கல் செய்த கடன் மோசடி வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்ட எஸ்பிஐ புகாரின்படி, 2018-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ. 40,000 கோடிக்கும் அதிகமாக இருந்தது என்றும், எஸ்பிஐ-க்கு மட்டும் ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

