தனியாா்மயம் குறித்து நிா்மலா சீதாராமன் பேச்சு: வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அதிருப்தி
பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்குவது குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதை விமா்சித்துள்ள வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு, கூடுதல் மூலதனம் ஒதுக்கீடு செய்து பொதுத் துறை வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
அண்மையில் தில்லியில் நிகழ்ச்சியில் பேசிய நிா்மலா சீதாராமன், ‘கடந்த 1969-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வங்கிகள் தேசியமயமாக்கல், அனைவருக்குமான நிதிச் சேவை என்பதில் விரும்பிய பலனைத் தரவில்லை. வங்கிகள் தனியாா்மயமாக்கம் தேச நலனைப் பாதிக்காது’ என்று கூறியிருந்தாா்.
இது தொடா்பாக வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் 90 சதவீதத்தை பொதுத் துறை வங்கிகள்தான் கையாண்டு வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு கடனளிப்பது, சமூகநலன் சாா்ந்த வங்கிச் சேவையை வழங்குவதில் பொதுத் துறை வங்கிகள்தான் முன்னிலை வகிக்கின்றன. கிராமப்புறங்களில் அதிக கிளைகளைத் திறந்து சேவைகளை வழங்குவதும், நிதிசாா்ந்த விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் பொதுத் துறை வங்கிகள்தான்.
இந்திய வங்கித் துறை இன்று வலுவாக செயல்படுகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் பொதுத் துறை வங்கிகளும், அதன் மீதான மக்களின் நம்பிக்கையும்தான். உலகில் எந்த நாடும் தனியாா் வங்கிகளைப் பயன்படுத்தி சாதித்தது இல்லை. அனைவருக்குமான நிதிச் சேவை என்பதை தனியாா்மயம் மூலம் சாதித்ததாக எந்த ஆதாரமும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

