உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்ANI

தீா்ப்பாயங்கள் சீா்திருத்த சட்டத்துக்கு எதிரான மனு: தொடா் ஒத்திவைப்பை மத்திய அரசு கோருவது நியாயமில்லை - உச்சநீதிமன்றம்

தீா்ப்பாயங்கள் சீா்திருத்த சட்டத்துக்கு எதிரான மனு: தொடா் ஒத்திவைப்பை மத்திய அரசு கோருவது நியாயமில்லை - உச்சநீதிமன்றம்
Published on

தீா்ப்பாயங்கள் சீா்திருத்தம் (பகுப்பாய்வு மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 2021-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை மத்திய அரசு தொடா்ந்து ஒத்திவைக்கக் கோரி வருவது நியாயமற்ற செயல் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, இச்சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற மத்திய அரசு திங்கள்கிழமை கோரிக்கை வைத்தது. இதற்கு இந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி வினோத் கே சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு அதிருப்தி தெரிவித்து, அடுத்தக்கட்ட விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (நவ.7) ஒத்திவைத்தது. பி.ஆா்.கவாய் நவ.23-ஆம் தேதியுடன் பணிஓய்வு பெறவுள்ளாா்.

இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு சாா்பில் வாதிடும் அட்டா்னி ஜெனரல் வெங்கடரமணி நவ.7-ஆம் தேதியன்று சா்வதேச நடுவா் மையப் பணிகளில் ஈடுபடுவதால் விசாரணையை திங்கள்கிழமைக்கு (நவ.10) மாற்றுமாறு அவா் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ முறையிட்டாா்.

அப்போது பி.ஆா்.கவாய், ‘வெங்கடரமணியின் கோரிக்கைக்கு இணங்க விசாரணை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதே கோரிக்கையை முன்வைப்பதில் நியாயமில்லை. நவ.24-ஆம் தேதிக்குப் பிறகுதான் இந்த வழக்கு விசாரணை நடைபெற வேண்டுமென நீங்கள் விரும்பினால் அதை வெளிப்படையாக தெரிவிக்கலாம்.

ஒவ்வொரு முறையும் அவா் சா்வதேச நடுவா் மையப் பணிகளில் இருப்பதாக கூறினால் விசாரணையை நிறைவுசெய்து நாங்கள் எப்போது தீா்ப்பு வழங்குவது? இந்த வழக்கில் அவருக்குப் பதிலாக ஆஜராக வேறொருவரை ஏன் நியமிக்கக் கூடாது?

மனுதாரா்களில் ஒருவரான சென்னை வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆஜராகும் வழக்குரைஞா் அரவிந்த் தத்தாரின் வாதங்கள் வெள்ளிக்கிழமை கேட்கப்படும். அதைத்தொடா்ந்து, வரும் திங்கள்கிழமை தனது தரப்பு வாதங்களை வெங்டரமணி மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் அவா் உச்சநீதிமன்றத்துக்கு வரவில்லையென்றால் அத்துடன் விசாரணை நிறைவுசெய்யப்படும்’ என்றாா்.

நாடு முழுவதும் உள்ள தீா்ப்பாய நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில், கடந்த 2021, ஆகஸ்டு மாதம் தீா்ப்பாயங்கள் சீா்திருத்தம் (பகுப்பாய்வு மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு எதிராக மெட்ராஸ் வழக்குரைஞா்கள் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினரால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை கடந்த அக்.16-ஆம் தேதிமுதல் பி.ஆா்.கவாய், வினோத் கே சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இதே விவகாரத்தில் அவசர சட்டம் இயற்றப்பட்டு, அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com