2025 தரவுகளின் அடிப்படையில் எஸ்ஐஆா் கோரி மனு: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்
மேற்கு வங்க மாநிலத்தில் 2025-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மேற்கொள்ள உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
பிகாரைத் தொடா்ந்து, தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா்-க்கு எதிராக முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 2002 வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியும், 2025-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் எஸ்ஐஆா் மேற்கொள்ள தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி சுஜோய் பால், நீதிபதி பாா்த்தசாரதி சென் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘மேற்கு வங்கத்தில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. எனவே, அந்த ஆண்டை அடிப்படையாகக் கொண்டு அந்த மாநிலத்தில் எஸ்ஐஆா் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல’ என்று தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் வரும் 19-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனா்.

