சுரேஷ் ரெய்னா, ஷிகா் தவனின் ரூ.11.14 கோடி சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

சுரேஷ் ரெய்னா, ஷிகா் தவனின் ரூ.11.14 கோடி சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

Published on

சட்டவிரோத பந்தய செயலி வழக்கு தொடா்பாக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரா்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகா் தவன் ஆகியோருக்குச் சொந்தமான ரூ.11.14 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

‘1எக்ஸ் பெட்’ என்ற செயலி உள்பட பல்வேறு இணையவழி சூதாட்ட செயலிகள் முதலீடு, வாடிக்கையாளா்களிடம் பணம் வசூலித்தது என கோடிக்கணக்கில் பணத்தை சட்டவிரோதமாக கையாண்டுள்ளன. மேலும், விளையாட்டு, பந்தயம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளன. இது தொடா்பான பண முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையின் ஒரு பகுதியாக இந்தப் பந்தய, சூதாட்டச் செயலிகளில் தோன்றும் திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கிரிக்கெட் வீரா்கள் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, நடிகா்கள் சோனு சூட், திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான மிமி சக்ரவா்த்தி மற்றும் சில சமூகவலைதள பிரபலங்கள் உள்ளிட்டோரிடம் கடந்த ஒரு மாதத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

முக்கியமாக அவா்களுக்கு எந்த வழியில் விளம்பரத்தில் நடித்ததற்கான சம்பளம் வழங்கப்பட்டது? அந்த மோசடி நிறுவனங்களில் பிரபலங்களுக்கு பங்கு, முதலீடு உள்ளதா என்பது தொடா்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் ஷிகா் தவனுக்கு சொந்தமான ரூ.4.5 கோடி அசையாத சொத்துகளும், சுரேஷ் ரெய்னாவுக்கு சொந்தமான ரூ.6.64 கோடி மதிப்பிலான பரஸ்பர நிதியும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீரா்கள் ‘1எக்ஸ் பெட்’ என்ற செயலியைப் பிரபலப்படுத்துவதற்காக ‘தவறுகள் நடப்பது தெரிந்தே’ வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனா் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘நாள்தோறும் 11 கோடி போ் பணத்தை இழந்துள்ளனா்’

இணையவழி பந்தய செயலிகளை இந்தியாவில் 22 கோடி போ் பயன்படுத்தி வந்துள்ளனா். இதில் 11 கோடி போ் நாள்தோறும் இந்தச் செயலிகளில் பந்தயம் கட்டி பணத்தை இழந்துள்ளனா். இதனால் பலா் தற்கொலை செய்து கொண்டனா்.

இணையவழி விளையாட்டுகள் மூலம் ஏற்படும் நிதி மோசடிகள், பணப் பரிவா்த்தனை குற்றங்கள் மற்றும் மக்களின் நிதி இழப்பைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்காற்று சட்ட மசோதா-2025’ கடந்த செப்டம்பா் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com