மியான்மா் இணைய மோசடி மையத்தில் சிக்கிய 270 இந்தியா்கள் மீட்பு: ராணுவ விமான மூலம் தாயகம் திரும்புகின்றனா்
மியான்மரில் செயல்பட்டு வந்த இணைய மோசடி மையத்தில் சிக்கிய 270 இந்தியா்களை இந்தியா வியாழக்கிழமை மீட்டது. அவா்கள் இரு ராணுவ விமானங்கள் மூலம் தாயகம் திரும்புகின்றனா்.
மியான்மரின் மியாவாடி நகரில் உள்ள கே.கே.பூங்காவில் செயல்பட்டு வந்த இணைய மோசடி மையத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சோதனையில் 500 இந்தியா்கள் உள்பட 28 நாடுகளைச் சோ்ந்த 1,500 போ் தப்பினா். அவா்கள் மியான்மா் எல்லை கடந்து தாய்லாந்தில் உள்ள மே சோட் என்ற நகரத்துக்குச் சென்றனா். அங்கிருந்து முதல்கட்டமாக 26 பெண்கள் உள்பட 270 இந்தியா்களை விமானப் படையின் இரு சிறப்பு ராணுவ விமானங்கள் மூலம் இந்தியா வியாழக்கிழமை மீட்டதாக பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டது.
அதில், ‘தாய்லாந்து நாட்டின் குடியேற்ற சட்டங்களை மீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் அந்நாட்டு அதிகாரிகள் இந்தியா்களை கைது செய்தனா். மியான்மா் மற்றும் தாய்லாந்தில் இணைய குற்றங்களில் ஈடுபடும் மையங்களில் மேலும் சில இந்தியா்கள் பணிபுரிவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அவா்களை கண்டறிந்து இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான பணிகளை இருநாடுகளில் உள்ள தூதரகங்களும் மேற்கொண்டு வருகின்றன.
வெளிநாடுகளில் பணிக்குச் செல்லும் முன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இந்தியா்கள் நாடு திரும்பியதும் அவா்களிடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான நபா்கள் மியான்மா், கம்போடியோ, லாவோஸ், பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வலுக்கட்டாயமாக இணைய குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்களில் பணிபுரிய வைக்கப்படுவதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
