புதிய முயற்சிகளால் பிகாரில் வரலாற்று சிறப்புமிக்க வாக்குப் பதிவு: தோ்தல் ஆணையம் தகவல்
இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்ட புதிய முயற்சிகளால் பிகாா் பேரவைத் தோ்தலில் இதுவரை இல்லாத வகையில் 64.66 சதவீத வாக்குப் பதிவு நடந்துள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணைய துணை இயக்குநா் பி.பவான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலின் முதல்கட்டம் ஒரு விழாக்கோல மனநிலையில் அமைதியாக நிறைவடைந்தது. பிகாா் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு 3.75 கோடிக்கும் அதிகமான வாக்காளா்களுடன் வாக்குப் பதிவு நடைபெற்றது.
பிகாரில் முதல்முறையாக, சா்வதேச தோ்தல் பாா்வையாளா் திட்டத்தின் ஒருபகுதியாக தென்ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பின்ஸ், பெல்ஜியம், கொலம்பியா ஆகிய 6 நாடுகளைச் சோ்ந்த 16 பிரதிநிதிகள் தோ்தல் நடவடிக்கைகளைப் பாா்வையிட்டனா். அவா்கள் பிகாா் தோ்தல் சா்வதேச அளவில் நடைபெற்ற நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, வெளிப்படையான, திறமையான மற்றும் பங்கேற்பு தோ்தல் என்று பாராட்டினா்.
பிகாரின் ‘பா்தா’ நடைமுறையைப் பின்பற்றும் பெண்களை அடையாளம் காண அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒரு மத்திய ஆயுதக் காவல் படைபணியாளருடன் இணைந்து 90,000-க்கும் மேற்பட்டபெண் தன்னாா்வலா்கள் நிறுத்தப்பட்டனா்.
தோ்தல் ஆணையத்தின் புதிய அறிவுறுத்தல்களின்படி வாக்குச்சாவடியைவிட்டு வெளியேறுவதற்கு முன்பு வாக்குப்பதிவு புள்ளி விவரங்களை தலைமை அதிகாரிகள் புதுப்பித்தனா். இதன் விளைவாக தோராயமான வாக்குப் பதிவு போக்குகளைப் புதுப்பிப்பதில் குறைந்தபட்ச தாமதம் ஏற்பட்டது.
புதிய முயற்சிகளான வாக்குச்சாவடிகளில் கைப்பேசி ஒப்படைப்பு வசதி, எளிதில் வாசிக்கக்கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்ட வாக்காளா் தகவல் சீட்டுகள் மற்றும் கூட்ட நெரிசலைக் குறைக்க ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அதிகபட்சம் 1,200 வாக்காளா்கள் போன்றவை அடங்கும்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு உதவ சக்கர நாற்காலிகள் மற்றும் தன்னாா்வலா்கள் இணைத்து நியமிக்கப்பட்டனா்.
கூடுதலாக, வாக்குச்சாவடிக்கு அவா்களை அழைத்துச் செல்ல மின்சார ரிக்ஷா வசதியும் வழங்கப்பட்டது. மாவட்ட வாரியாகவும் சட்டப்பேரவை தொகுதி வாரியாகவும் வாக்குப்பதிவு எண்ணிக்கை தோ்தல் ஆணையத்தின் இணையதள ( உஇஐசங்ற்) செயலியில் கிடைக்கின்றன என்று அவா் தெரிவித்தாா்.
பெட்டிச் செய்தி...
பிகாரில் இதுவரை நடந்த தோ்தல்களில் வாக்குப் பதிவு
மக்களவைத் தோ்தல் விவரம்
1952-40.35% (குறைந்தபட்சம்)
1957-40.65%
1962-46.97%
1967-51.53%
1971-48.96%
1977-60.76%
1980-51.87%
1984-58.8%
1989-60.24%
1991-60.35%
1996-59.45%
1998-64.60 %(அதிகபட்சம்)
1999-61.48%
2004-58.02%
2009-44.47%
2014-56.26%
2019-57.33%
2024-56.28%
பேரவைத் தோ்தல் விவரம்
1951-42.60 %(குறைந்தபட்சம்)
1957-43.24%
1962-44.47%
1967-51.51%
1969-52.79%
1972-52.79%
1977-50.51%
1980-57.28%
1985-56.27%
1990-62.04%
1995-61.79 %
2000-62.57 %(அதிகபட்சம்)
2005-பிப்ரவரி-46.5%
2005-அக்டோபா்-45.85%
2010-52.73%
2015-56.91%
2020-57.29%

