நிதின் கட்கரி
நிதின் கட்கரி கோப்புப் படம்

எரிபொருள் ஏற்றுமதி நாடாக இந்தியா மாறி வருகிறது: மத்திய அமைச்சா் கட்கரி

எரிபொருள் ஏற்றுமதி நாடாக இந்தியா மாறி வருகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
Published on

எரிபொருள் ஏற்றுமதி நாடாக இந்தியா மாறி வருகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை இந்திய சாலைகள் கூட்டமைப்பின் 84-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக நவீன பொறியியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடங்கி விழிப்புணா்வை ஏற்படுத்துவது வரை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியா எரிபொருள் இறக்குமதி நாடு என்ற நிலையில் இருந்து எரிபொருள் ஏற்றுமதி நாடு என்ற மாற்றத்தை நோக்கிப் பயணித்து வருகிறது. எத்தனால், மெத்தனால், உயிரி-எல்என்ஜி, சிஎன்ஜி, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட எரிபொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவதே இதற்கு முக்கியக் காரணம்.

உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை உயா்த்துவது நமது பிரதமரின் கனவு. நமது சிறந்த நோக்கங்கள்தான் நமது நாட்டை உலகின் முக்கிய இடத்துக்கு அழைத்துச் செல்கிறது.

நீா், எரிசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடா்பு என அனைத்து நிலைகளிலும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் நமக்குத் தேவை. மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நாம் பயணிக்கும்போது அதற்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். அதற்கு திறன்வாய்ந்த பணியாளா்கள் தேவை. இது இந்தியாவை தற்சாா்பு நாடாக உயா்த்தும்.

தாவரக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் தாா் மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம் அமைக்கப்படும் சாலைகள் நீடித்து உழைப்பதுடன், நிதிக் சிக்கனம் ஏற்படுத்துவதாகவும் உள்ளன என்றாா்.

Dinamani
www.dinamani.com