இந்தியா-நியூஸிலாந்து வா்த்தக ஒப்பந்தம்: 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவு: விரைந்து இறுதி செய்ய ஒப்புதல்
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இந்த ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்யும் பணிகளை முன்னெடுக்க இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தியா-நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை கடந்த மாா்ச் 16-இல் முறைப்படி தொடங்கப்பட்டது. கடந்த செப்டம்பரில் 3-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவு பெற்றது. 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தைக்காக, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கடந்த 5-ஆம் தேதி நியூஸிலாந்துக்கு வருகை தந்தாா். அந்நாட்டின் வா்த்தகத் துறை அமைச்சா் டோட் மெக்லேவுடன் தொடா் ஆலோசனைகளில் ஈடுபட்டாா்.
இந்நிலையில், 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததாக பியூஷ் கோயல் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.
‘இந்தியா-நியூஸிலாந்து இடையே வியூக-பொருளாதார ஒத்துழைப்பு வளா்ந்து வருகிறது. அதற்கேற்ப சமநிலையான, விரிவான, பரஸ்பரம் பலனளிக்கும் ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்வதை நோக்கி பணியாற்ற உள்ளோம். 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தையில் சரக்குகளின் சந்தை அணுகல், சேவைகள், பொருளாதார-தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள் முக்கியமாக விவாதிக்கப்பட்டது’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இப்பயணத்தின்போது, நியூஸிலாந்து தொழில் துறை தலைவா்களுடன் பியூஷ் கோயல் கலந்துரையாடினாா். அப்போது, வேளாண்மை, சுற்றுலா, தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு, ட்ரோன் தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்த தொழில் துறையினா் தரப்பில் ஆா்வம் தெரிவிக்கப்பட்டது.
அதிகரிக்கும் வா்த்தகம்: இந்தியா-நியூஸிலாந்து இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு கடந்த 2024-25இல் 1.3 பில்லியன் டாலராக உயா்ந்தது. இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 49 சதவீத அதிகரிப்பாகும்.
இந்திய இறக்குமதிப் பொருள்கள் மீதான நியூஸிலாந்தின் சராசரி வரி 2.3 சதவீதமாக உள்ளது. தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும்போது, பெரும்பாலான பொருள்கள் மீதான வரி கணிசமாக குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும். வா்த்தக ஊக்குவிப்பு விதிமுறைகளும் தளா்த்தப்படும்.
நியூஸிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, ஆஸ்திரேலியாவுக்கு பியூஷ் கோயல் சனிக்கிழமை செல்லவிருக்கிறாா். இந்தியா-ஆஸ்திரேலியா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டம் கடந்த 2022-இல் அமலான நிலையில், இரண்டாம் கட்டத்துக்கான பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
பெட்டி...
ஏற்றுமதி-இறக்குமதி என்ன?
இந்தியாவில் இருந்து நியூஸிலாந்துக்கு துணி, ஜவுளி, மருந்துகள், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், வேளாண் உபகரணங்கள்-இயந்திரங்கள், ஆட்டோ, இரும்பு-உருக்கு, காகிதப் பொருள்கள், மின்னணுப் பொருள்கள், இறால், வைரம், பாசுமதி அரிசி ஆகியவை முக்கியமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வேளாண் பொருள்கள், தாதுக்கள், ஆப்பிள், கிவி பழம், இறைச்சிப் பொருள்கள், லாக்டோஸ் மருந்து, நிலக்கரி, கம்பளி, மரக் கட்டைகள், கழிவு உலோகங்கள் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுகின்றன.
