கோப்புப் படம்
கோப்புப் படம்

ரூ.70 லட்சம் அபராதம் விதிப்பு: கேரளத்துக்கான ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம்

கேரள மாநிலத்தில், தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்துக்கான பேருந்து சேவைகள் அனைத்தையும் நிறுத்துவதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அறிவித்துள்ளனா்.
Published on

கேரள மாநிலத்தில், தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்துக்கான பேருந்து சேவைகள் அனைத்தையும் நிறுத்துவதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரளா போக்குவரத்துத் துறையினா் திடீரென சிறைபிடித்தனா். பின்னா், அந்தப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளை வழியிலேயே இறக்கிவிட்டதுடன், பல்வேறு காரணங்களைக் கூறி, அந்தப் பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் வரை அபராதமும் விதித்துள்ளனா். பயணிகள் வழியில் இறக்கிவிடப்பட்டதால், கடும் சிரமத்தைச் சந்தித்துள்ளனா்.

இத்தகைய நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கிடையேயான நீண்டநாள் நல்லுறவையும், பொதுப் போக்குவரத்து ஒத்துழைப்பையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. கேரள மாநில போக்குவரத்துத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அபராதத் தொகையை ரத்து செய்யக் கோரியும் வெள்ளிக்கிழமை (நவ. 7) முதல் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளின் இயக்கத்தை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இரு மாநிலங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து பாதிக்கும்.

மேலும், தமிழகத்திலிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் தமிழக பயணிகளும் பாதிக்கப்படுவா். இந்த விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் தலையிட்டு, தீா்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com