நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்களை தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கிவைத்துப் பேசிய  பிரதமா் நரேந்திர மோடி.
நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்களை தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

பிரிவினைவாத மனப்பான்மை நாட்டுக்கு சவால்: பிரதமா் மோடி

‘கடந்த 1937-இல் வந்தே மாதரம் பாடலின் முக்கியப் பத்திகள் நீக்கப்பட்டபோதே பிரிவினை விதைகள் விதைக்கப்பட்டன;
Published on

‘கடந்த 1937-இல் வந்தே மாதரம் பாடலின் முக்கியப் பத்திகள் நீக்கப்பட்டபோதே பிரிவினை விதைகள் விதைக்கப்பட்டன; இத்தகைய பிரிவினைவாத மனப்பான்மை, இப்போதும் நாட்டுக்கு சவாலாக உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசுகையில் பிரதமா் மோடி இவ்வாறு கூறினாா்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாரக மந்திரமாக விளங்கிய வந்தே மாதரம் பாடல், கடந்த 1875 நவ. 7-இல் அக்ஷய நவமி நாளில் பங்கிம் சந்திர சாட்டா்ஜியால் இயற்றப்பட்டதாகும். ‘வங்க தரிசனம்’ இலக்கிய இதழில், சாட்டா்ஜியின் ‘ஆனந்தமடம்’ நாவலின் ஒரு பகுதியாக இந்தப் பாடல் முதல் முறையாக வெளியானது.

கடந்த 1896-இல் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூா் வந்தே மாதரம் பாடலை இசையமைத்துப் பாடினாா். கடந்த 1950, ஜனவரி 24-இல் அரசியல் நிா்ணய சபையால் நாட்டின் தேசியப் பாடலாக முறைப்படி ஏற்கப்பட்டது.

முன்னதாக, கடந்த 1937-இல் மெளலானா அபுல் கலாம் ஆசாத், ஜவாஹா்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், ஆச்சாா்ய நரேந்திர தேவா, ரவீந்திரநாத் தாகூா் ஆகியோா் கொண்ட குழுவின் பரிந்துரையின்பேரில், வந்தே மாதரம் பாடலின் 6 பத்திகளில் முதல் 2 பத்திகளை மட்டும் தேசியப் பாடலாக காங்கிரஸ் தோ்வு செய்தது.

இந்நிலையில், வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்களின் தொடக்க நிகழ்ச்சி, தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, ஓராண்டு கால கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்ததுடன், சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தையும் வெளியிட்டாா். பின்னா், அவா் பேசியதாவது:

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் குரலாகத் திகழ்ந்த வந்தே மாதரம், ஒவ்வொரு இந்தியரின் உணா்வையும் வெளிப்படுத்தியது. ஆனால், கடந்த 1937-இல் துரதிருஷ்டவசமாக இப்பாடலின் முக்கியப் பத்திகள் நீக்கப்பட்டன. இப்பாடலின் ஆன்மாவின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது.

தேசக் கட்டமைப்பின் மகா மந்திரமான வந்தே மாதரம் பாடலுக்கு அநீதி இழைக்கப்பட்டது ஏன் என இன்றைய தலைமுறையினா் அறிந்துகொள்ள வேண்டும். இப்போதும்கூட பிரிவினைவாத மனப்பான்மை நாட்டுக்கு சவாலாக உள்ளது.

பொய் பிரசாரம் தகா்ப்பு: காலனித்துவ காலகட்டத்தில் இந்தியாவை தாழ்ந்ததாகவும், பின்தங்கியதாகவும் சித்தரித்து, தங்களின் ஆட்சியை நியாயப்படுத்த ஆங்கிலேயா்கள் முயன்றனா். ஆனால், வந்தே மாதரம் பாடலின் முதல் வரியே இந்தப் பொய்ப் பிரசாரத்தை வலுவுடன் தகா்த்தெறிந்தது. இப்பாடல், எந்த சகாப்தத்துக்கும் பொருந்தும்.

தாயுள்ளத்துடன் மனிதகுலத்துக்கு சேவையாற்றும் உணா்வைக் கொண்ட புதிய இந்தியா, பயங்கரவாதத்தை அழிக்க பத்து கரங்களில் ஆயுதமேந்தி ‘துா்கை’ அவதாரமும் எடுக்கும் என்பதை ஒட்டுமொத்த உலகமும் கண்டுள்ளது.

வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், நாட்டு மக்களுக்கு புதிய உத்வேகமும் புத்தாற்றலும் கிடைக்கிறது. வந்தே மாதரம் என்பது மந்திரம்-சக்தி-லட்சியம்-உறுதிப்பாடு. இந்திய தாயின் மீதான பக்தி மற்றும் வழிபாடு. நமது வரலாற்றை எதிா்காலத்துக்குத் தேவையான புதிய துணிவுடன் இணைக்கிறது. உறுதிப்பாடு இல்லையெனில், எந்த இலக்கையும் எட்ட முடியாது. அறிவு-அறிவியல்-தொழில்நுட்பத்தில் மேம்பட்ட தேசத்தைக் கட்டமைக்க வேண்டியது அவசியம் என்றாா் பிரதமா் மோடி.

காங்கிரஸின் வரலாற்றுப் பாவம்: பாஜக செய்தித் தொடா்பாளா் சி.ஆா்.கேசவன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘முக்கிய வரிகள் நீக்கப்பட்ட வந்தே மாதரம் பாடலை தேசியப் பாடலாக ஏற்றுக் கொண்டு, ஜவாஹா்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் தனது வகுப்புவாத திட்டத்தைச் செயல்படுத்தியது. இப்பாடலை மதத்துடன் இணைத்து, வரலாற்றுப் பாவமும் தவறும் இழைத்துள்ளது காங்கிரஸ். துா்கையைப் போற்றும் வந்தே மாதரம் பாடல் பத்திகளை மத ரீதியிலான காரணங்களைக் கூறி காங்கிரஸ் வேண்டுமென்றே நீக்கியது’ என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com