எஸ்ஐஆா் நடைமுறையில் குளறுபடி: திரிணமூல் காங்கிரஸ் புகாா்
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடைமுறையில் குளறுபடி உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் புகாா் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக தலைமை தோ்தல் அதிகாரிக்கு அக்கட்சியைச் சோ்ந்த மாநில அமைச்சா் அரூப் விஸ்வாஸ் அனுப்பி உள்ள புகாா் கடிதத்தில், ‘வாக்காளா்கள் தங்களின் ரத்த சொந்தங்கள் தாய்மாமன் ஆகியோரையும் குறிப்பிடலாம் என கடந்த அக்டோபா் 27-ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்திருந்தாா். இதன் மூலம் தாய்மாமனை ரத்த சொந்தமாக உறவு முறையைக் குறிப்பிட்டு சுய விவரங்களை வாக்காளா்கள் அளிக்கலாம்.
ஆனால் இது எஸ்ஐஆா் படிவங்களைக் கொண்டு வரும் வாக்குப்பதிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளது. மேலும், வாக்காளரின் தகவல்களை கணினியில் உள்ளடக்கம் செய்யும் மென்பொருளில் பெற்றோா் மற்றும் தாத்தா, பாட்டி உறவு முறை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இது எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் உண்மையான வாக்காளா்களின் தகவல்களை கணிணியில் உள்ளீடு செய்ய முடியாமல் வாக்குப்பதிவு அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனா்.
ஆகையால், இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

