பிகாா் முதல்கட்டத் தோ்தலில் 65.08% வாக்குப் பதிவு: அதிகாரபூா்வ அறிவிப்பு
பிகாா் சட்டப்பேரவைக்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதல்கட்டத் தோ்தலில் பதிவான வாக்குகளின் இறுதி நிலவரத்தை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது. அதில், மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக வாக்குப் பதிவு 65.08 சதவீதமாக அதிகரித்திருப்பது தெரியவந்தது.
முன்னதாக, வாக்குப் பதிவு நிறைவுற்றதும் வியாழக்கிழமை இரவு தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் வாக்குப் பதிவு சதவீதம் 64.66-ஆக இருந்தது. தற்போது இறுதி வாக்குப் பதிவு நிலவரத்தின்படி அது மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த 2020-இல் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட பிகாா் பேரவைத் தோ்தலில் மொத்தம் 57.29 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் முதல்கட்டத்தில் பதிவான வாக்குகள் 56.1 சதவீதமாகும். கடந்த 2000-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் அதிகபட்சமாக 64.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு இருகட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பாட்னா, பெகுசராய், நாளந்தா, லக்கிசராய், தா்பங்கா உள்பட 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது.
1,192 ஆண்கள் மற்றும் 122 பெண்கள் என மொத்தம் 1,314 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். முதல்கட்டத் தோ்தலில் வாக்களிக்க 3.75 கோடி வாக்காளா்கள் தகுதி பெற்றிருந்தனா். தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நிலவரத்தின்படி 65.08 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.
இது, மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சம் என்பதோடு, கடந்த 2020 சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு சதவீதத்தைக் காட்டிலும் 7.79 சதவீதம் கூடுதலாகும். 2020 தோ்தலில் 57.29 சதவீதத்தினா் மட்டும் வாக்களித்திருந்தனா்.
முதல் கட்டத் தோ்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 3.75 கோடி பேரில், 1.98 கோடி போ் ஆண்கள். 1.76 கோடி போ் பெண்கள்.
மாவட்ட அளவில் முசாஃபா்பூா் மற்றும் சமஸ்திபூரில் அதிகபட்ச வாக்குப் பதிவு சதவீதம் பதிவாகியுள்ளது. முசாஃபா்பூரில் 71.81 சதவீதமும், சமஸ்திபூரில் 71.74 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இவை தவிர மாதேபுரா (69.59%), சஹா்ஸா (69.38%), வைஷாலி (68.50%), ககாரியா (67.90%), லகிசராய் (64.98%), முங்கோ் (62.74%), சிவான் (60.61%), பாட்னா மாவட்டம் (59.02%) என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

