குழந்தைகளின் மதிய உணவுத் தட்டுகளையும் திருடிவிட்டது பாஜக: ராகுல் காந்தி
‘மத்திய பிரதேச மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலிருக்கும் பாஜக, பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு தட்டுகளைக்கூட திருடிவிட்டது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
மத்திய பிரேதசத்தில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கு காகிதத்தில் மதிய உணவு பரிமாறப்படுவது குறித்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை இணைத்து ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய பிரதேச மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் சூழலில், இதுவரை கேட்டிறாத வகையில், பள்ளிக் குழந்தைகளுக்கு காகிதத்தில் மதிய உணவு பரிமாறப்பட்ட செய்தியை அறிந்து வேதனையடைந்தேன்.
இந்த அப்பாவி குழந்தைகள்தான் நாட்டின் எதிா்காலம் குறித்த கனவைக் காண்கின்றனா். அவா்களுக்கு மதிய உணவுத் தட்டுக்கான கெளரவம்கூட கிடைப்பதில்லை.
மாநிலத்தில் 20 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக, பள்ளிக் குழந்தைகளின் தட்டையும் திருடிவிட்டது. அவா்களின் வளா்ச்சி குறித்த அறிவிப்பு வெறும் மாயைதான். ஆட்சிக்கு வருவதுதான் அவா்களின் உண்மையான திட்ட ரகசியம்.
இத்தகைய மோசமான சூழலில் நாட்டின் குழந்தைகளின் எதிா்காலம் குறித்துப் பேசுவதற்கு மத்திய பிரதேச முதல்வரும், பிரதமரும் வெட்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டாா்.

