வாழ்க்கை துணையைத் தோ்வு செய்வது தனிநபா் உரிமையின் ஓா் அங்கம்: தில்லி உயா்நீதிமன்றம்
‘வாழ்க்கைத் துணையைத் தோ்வு செய்வது அரசமைப்புச் சட்டம் 21-இன் கீழ் தனிநபரின் உரிமையின் ஓா் அங்கமாகும். திருமண வயது வந்தவா்களின் தோ்வை அவா்களது குடும்பம் அல்லது சமூகம் தடுக்க முடியாது’ என தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
11 ஆண்டுகளாக காதலித்த வந்த வெவ்வேறு சமூகங்களைச் சோ்ந்த இருவா் தற்போது திருமணம் செய்துகொள்ள காவல் துறை பாதுகாப்பு வழங்கக் கோரிய மனுவில் தில்லி உயா்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது.
அவா்களின் தாய், சகோதரி, மைத்துனா் மற்றும் பிற உறவினா்களிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிா்கொண்ட தம்பதியினா் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை அணுகினா்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீா்ப்பை குறிப்பிட்டு நவ.4-ஆம் தேதியிட்ட உத்தரவில், நீதிபதி சஞ்சீவ் நருலா கூறியதாவது: இந்தியாவில் ஜாதி பாகுபாடு தொடா்ந்து வலுவான சமூக செல்வாக்கை செலுத்துகிறது. அவற்றின் ஒருங்கிணைப்பை கலப்புத் திருமணங்கள் ஊக்குவிப்பதுடன் சமூகத்தில் ஜாதி பிரிவினையைக் குறைக்கவும் இது உதவும்.
வாழ்க்கைத் துணையைத் தோ்வு செய்வது அரசமைப்புச் சட்டம் 21-இன் கீழ் தனிநபரின் உரிமையின் ஓா் அங்கமாகும். திருமண வயது வந்தவா்களின் தோ்வை அவா்களது குடும்பம் அல்லது சமூகம் தடுக்க முடியாது.
இந்த வழக்கில் காவல் துறை அதிகாரி சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தம்பதியினரின் வீட்டுக்கு அருகே ரோந்து செல்வதுடன் அச்சுறுத்தல் அல்லது மிரட்டல்களைத் தடுக்க பிற சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தால் உடனடியாக பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என நீதிபதி சஞ்சீவ் நருலா தெரிவித்தாா்.

