பருவநிலைக்கு எதிரான லட்சியம் நிறைவாக இல்லை: ஐ.நா. மாநாட்டில் இந்தியா
‘பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 10 ஆண்டுகளானபோதிலும், உலக அளவில் பருவநிலைக்கு எதிரான லட்சியம் நிறைவாக இல்லை’ என்று ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில் இந்தியா தெரிவித்தது.
இதுதொடா்பாக பிரேஸிலின் பெலெம் நகரில் நடைபெறும் அந்த மாநாட்டில் அந்நாட்டுக்கான இந்திய தூதா் தினேஷ் பாட்டீயா பேசியதாவது: தனது பசுமைக் குடில் வாயு உமிழ்வின் தீவிரத்தை 36 சதவீதம் அளவுக்கு இந்தியா குறைத்துள்ளது. இந்தப் போக்குத் தொடா்ந்து நீடித்து வருகிறது.
தற்போது இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் பாதிக்கும் மேல் புதைபடிமத்தைச் சாராமல் தயாரிக்கப்படுகிறது. இது பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் திருத்தியமைக்கப்பட்ட தேசிய பருவநிலை திட்டங்களின் இலக்கை நிா்ணயிக்கப்பட்ட காலத்திலிருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பே எட்ட வழிவகுத்துள்ளது.
இந்தியாவின் நிலப்பரப்பில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17 சதவீதம் விரிவடைந்துள்ளது. இது கூடுதலாக 229 கோடி டன் கரியமில வாயுவை ஈா்த்துக்கொள்ள வழியமைத்துள்ளது.
சுமாா் 200 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தயாரிப்பதன் மூலம், தற்போது உலகில் அதிக அளவு புதுப்பிக்கத்த எரிசக்தி தயாரிக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை மேற்கொண்டு 10 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், உலக அளவில் பருவநிலைக்கு எதிரான லட்சியம் நிறைவாக இல்லை. தேசிய பருவநிலை திட்டங்கள் மூலம் பருவநிலைக்கு எதிராக பல நாடுகளின் பங்களிப்புகள் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யவில்லை.
பருவநிலைக்கு எதிராக வளா்ந்துவரும் நாடுகள் தொடா்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதேவேளையில், பூமியை வெப்பமயமாக்கும் பசுமைக் குடில் வாயு உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகளை வளா்ச்சியடைந்த நாடுகள் துரிதப்படுத்த வேண்டும். அத்துடன் பருவநிலைக்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதுணையாக இருப்பதாக அளித்த வாக்குறுதியை அந்த நாடுகள் நிறைவேற்ற வேண்டும்.
அடுத்த 10 ஆண்டுகள்...: அடுத்த 10 ஆண்டுகள் என்பது பருவநிலை மாற்றத்துக்கு எதிராக இலக்குகளை நிா்ணயிப்பதாக மட்டுமே இருக்கக் கூடாது. அந்த நடவடிக்கைகளை தெளிவாகச் செயல்படுத்துதல், பருவநிலை மாற்ற பாதிப்புகளைத் தாங்கி நின்று மீண்டு எழும் தன்மையைக் கட்டியமைத்தல், பரஸ்பர நன்மை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் கூட்டுப் பொறுப்பை உறுதி செய்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என்றாா்.
இதனிடையே காடுகளைப் பாதுகாத்து, விரிவுபடுத்தும் வெப்பமண்டல நாடுகளுக்கு வெகுமதி அளிக்கும் நோக்கில், பிரேஸில் தலைமையிலான உலகளாவிய நிதியத்தில் இந்தியா பாா்வையாளராக இணைந்துள்ளது.

