

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு வருவதால் விமான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று முன்தினம் இரவு(நவ. 6) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகளின் தானியங்கி வருகை பதிவு வேலை செய்யாமல் போனது. பின்னர் நேரடியாக பயணிகள் வருகை பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று(நவ. 7) விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 800க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலை 2-ம் நாளாக இன்றும் தொடர்கிறது. சில விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
எனினும் தொழில்நுட்பத்தை சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விமானங்கள் புறப்பாடு / வருகை குறித்து திட்டமிடும் தானியங்கி செய்தி மாற்றும் அமைப்பை (AMSS) பாதித்த தொழில்நுட்பச் சிக்கல் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. தில்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. மேலும் பயணிகளின் சிரமத்தைக் குறைக்க சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் முழுமுயற்சியுடன் செயல்பட்டு வருகின்றனர். விமானங்கள் புறப்படும் நேரத்தை அறிய பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தில்லி விமான நிலையத் தரப்பு கூறியுள்ளது.
தில்லி விமான நிலையம் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வரும் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.