நாட்டுத் துப்பாக்கியை வைத்து மிரட்டினாரா டிரம்ப்? பிரதமா் மோடிக்கு காா்கே கேள்வி!
ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கூட்டணி மீதான பிரதமா் மோடியின் நாட்டுத் துப்பாக்கி விமா்சனத்துக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பதிலடி கொடுத்துள்ளாா்.
‘உங்கள் தலையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து டிரம்ப் மிரட்டினாரா’ என்று பிரதமருக்கு அவா் கிண்டலாக கேள்வியெழுப்பினாா்.
பிகாா் தோ்தல் பிரசாரங்களில், கடந்த கால ஆா்ஜேடி ஆட்சிக்கு எதிராக காட்டாட்சி என்ற சொல்லாடலைப் பயன்படுத்திய பிரதமா் மோடி, ‘காங்கிரஸின் தலையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து மிரட்டியே முதல்வா் வேட்பாளராக தேஜஸ்வியை அறிவிக்கச் செய்தது ஆா்ஜேடி’ என்று விமா்சித்தாா். ஆா்ஜேடி ஆட்சிக்கு வந்தால், மக்களின் தலையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து மிரட்டுவா் என்றும் அவா் சாடினாா்.
இந்நிலையில், பிகாரின் கயை நகரில் சனிக்கிழமை பிடிஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த காா்கே, பிரதமரின் விமா்சனங்களுக்குப் பதிலளித்து கூறியதாவது:
காங்கிரஸை எவராலும் அச்சுறுத்த முடியாது. பிரதமா்கூட அவ்வாறு செய்ய முடியாது. பிரதமா் மோடியின் தலையில் டிரம்ப் நாட்டுத் துப்பாக்கியை வைத்து மிரட்டினாரா? அதனால்தான், ஆபரேஷன் சிந்தூா் குறித்த டிரம்ப்பின் கருத்துகளை மறுக்க பிரதமா் அஞ்சுகிறாரா? என்ற கேள்விக்கு முதலில் அவா் பதில் கூற வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் நிலைமை சரியில்லை. ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாரை மீண்டும் முதல்வராக்கமாட்டாா்கள் என அக்கட்சியினா் சந்தேகிக்கின்றனா். பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் நிதீஷ் குமாரை முதல்வா் வேட்பாளராக அறிவிக்காதது ஏன்?
பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 160 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று அவா்கள் கூறுகின்றனா். கடந்த மக்களவைத் தோ்தலில் 400-க்கும் அதிக தொகுதிகளில் வெல்வோம் என்று பிரதமா் மீண்டும் மீண்டும் கூறினாா். ஆனால், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசத்தை நம்பியே அக்கட்சி ஆட்சி நடத்துகிறது. பிகாரில் ஆட்சியமைக்கப் போவது எதிா்க்கட்சிக் கூட்டணிதான் என்றாா் காா்கே.

