

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து எர்ணாகுளம்-பெங்களூர் உள்பட நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பனாரஸ்-கஜுராஹோ, லக்னோ-சஹரன்பூர், ஃபிரோஸ்பூர்-டெல்லி மற்றும் எர்ணாகுளம்-பெங்களூரு வழித்தடங்களில் இயக்கப்படும். நாட்டின் முக்கிய இடங்களுக்கு இடையிலான பயண நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதன் மூலம், இந்த ரயில்கள் பிராந்திய இயக்கத்தை மேம்படுத்தும். அதோடு சுற்றுலாவை மேம்படுத்தும், நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளை ஆதரிக்கும். இதில் எர்ணாகுளம் - பெங்களூர் வந்தே பாரத் ரயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகள் வழியாக இயக்கப்பட உள்ளது.
பனாரஸ்-கஜுராஹோ வந்தே பாரத் இந்த வழித்தடத்தில் நேரடி இணைப்பை ஏற்படுத்தும். தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களுடன் ஒப்பிடும்போது சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் மிச்சப்படுத்தும். பனாரஸ்-கஜுராஹோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூட், கஜுராஹோ உள்ளிட்ட இந்தியாவின் மத மற்றும் கலாசார இடங்களை இணைக்கும். இந்த இணைப்பு மத மற்றும் கலாசார சுற்றுலாவை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கஜுராஹோவிற்கு விரைவான மற்றும் நவீன வசதியான பயணத்தை வழங்கும்.
லக்னௌ-சஹரன்பூர் வந்தே பாரத் சுமார் 7 மணி நேரம் 45 நிமிடங்களில் பயணத்தை நிறைவு செய்யும். இது கிட்டத்தட்ட 1 மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும். லக்னௌ -சஹரன்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் லக்னௌ, சீதாபூர், ஷாஜகான்பூர், பரேலி, மொராதாபாத், பிஜ்னோர் மற்றும் சஹரன்பூர் பயணிகளுக்குப் பெரிதும் பயனளிக்கும், அதே நேரத்தில் ரூர்க்கி வழியாக புனித நகரமான ஹரித்வாருக்கு அணுகலை மேம்படுத்தும். மத்திய மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் முழுவதும் வேகமாகப் பயணம் மேற்கொள்வதையும் உறுதி செய்வதன் மூலம், இந்த சேவை இணைப்பு, பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
ஃபிரோஸ்பூர்-தில்லி வந்தே பாரத் இந்த வழித்தடத்தில் வேகமான ரயிலாக இருக்கும், பயணத்தை வெறும் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் நிறைவு செய்யும். ஃபிரோஸ்பூர்-தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தேசிய தலைநகரம், பஞ்சாபில் உள்ள முக்கிய நகரங்களான ஃபிரோஸ்பூர், பதிண்டா மற்றும் பாட்டியாலா ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்தும். இந்த ரயில் வர்த்தகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கும், எல்லைப் பகுதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும் என்றும், தேசிய சந்தைகளுடன் அதிக ஒருங்கிணைப்பை வளர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்தியாவில், எர்ணாகுளம்-பெங்களூர் வந்தே பாரத் பயண நேரத்தை 2 மணி நேரத்திற்கும் மேலாகக் குறைத்து, பயணத்தை 8 மணி நேரம் 40 நிமிடங்களில் முடிக்கும். எர்ணாகுளம்-பெங்களூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முக்கிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக மையங்களை இணைக்கும். இது தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவான மற்றும் வசதியான பயண விருப்பத்தை வழங்கும். இந்த பாதை கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் இடையே அதிக பொருளாதார செயல்பாடு மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும், பிராந்திய வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை ஆதரிக்கும்.
இந்த நிகழ்வில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.