

பொதுவெளியில் உங்களுடைய போனைத் திருடி அதன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் செய்யும் மோசடி அதிகரித்து வருகிறது.
சைபர் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மோசடிக்கு ஆளானால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்று சைபர் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மொபைல் போனைத் திருடி வங்கிக்கணக்கில் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் அதிகரித்து வருகின்றன.
இதற்கு உதாரணமாக ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
68 வயது முதியவர் ஒருவர் ஹைதராபாத்தில் ஆட்டோவில் பயணித்துள்ளார். வீட்டிற்கு வந்துபார்த்தபோது போன் காணவில்லை. போன் திருடுபோனது தெரிய வந்தது.
உடனடியாக அவரது சிம் பிளாக் செய்யப்பட்டு அவர் வேறு போன் வாங்கிய நிலையில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 1.95 லட்சம் பணம் டெபிட் ஆனது தெரிய வந்தது.
உடனடியாக அவர் காவல்துறையில் புகார் அளித்து சைபர் குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதியவர் தனது ஆட்டோ கட்டணத்தை போன்பே செயலியில் அனுப்ப ஆட்டோ டிரைவர் கேட்கவே, முதியவரும் அவரது பார்வையிலேயே போனை அன்-லாக் செய்து(போனைத் திறக்கும் பின் அழுத்தி) பணம் அனுப்பியுள்ளார். அதனைத் தெரிந்துகொண்டு ஆட்டோ டிரைவர்தான் முதியவரின் போனைத் திருடியுள்ளார். பின்னர் அந்த பின் நம்பரை பயன்படுத்தி முதியவரின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை மாறியுள்ளார்.
பெட்ரோல் நிலையம், பல்வேறு கடைகளில் க்யூ ஆர் கோடு மூலமாக குறிப்பிட்ட பணத்தை பரிவர்த்தனையாக செலுத்தி பணமாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஆட்டோவில் பயணிக்கும்போது டிரைவரின் விவரங்களை தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும், யார் முன்னிலையிலும் போன் பாஸ்வேர்டு, பணப்பரிவர்த்தனைக்கான பாஸ்வேர்டுகளை உள்ளீடு செய்யக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
பொதுவெளியில் செல்லும்போது போனை கவனமாக வைத்திருக்க வேண்டும்.
போன் தொலைந்துபோனால் உடனடியாக காவல்துறையில் தகவல் தெரிவிப்பதுடன் வங்கியையும் தொடர்புகொண்டு உங்கள் கணக்கில் இருந்து பணம் செல்லாதவாறு பிளாக் செய்யுங்கள். சிம் கார்டையும் பிளாக் செய்யுங்கள்.
உங்கள் போனில் எந்த பாஸ்வேர்டுகளையும் சேமித்து வைக்காதீர்கள்.
யாரிடமும் போன் பாஸ்வேர்டு உள்ளிட்ட எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டாம். யார் முன்பும் அந்த பாஸ்வேர்டை உள்ளிடவும் வேண்டாம்.
உங்கள் போனில் உள்ள தகவல்களைத் திருடியும் அதன் மூலமாக உங்களை மிரட்டியும் பணம் பறிக்கலாம். அதனால் விழிப்புடன் இருங்கள்.
அனைத்து கணக்குகளிலும் ஈரடுக்கு பாதுகாப்பு சரிபார்ப்பு முறையை(two way authentication) வைத்திருங்கள்.
வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துங்கள்.
இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.