பிகாா் மாநிலம் சீதாமா்ஹியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
பிகாா் மாநிலம் சீதாமா்ஹியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.

ஆா்ஜேடி ஆட்சிக்கு வந்தால் மக்களை நாட்டுத் துப்பாக்கி வைத்து மிரட்டுவா்: மோடி கடும் விமா்சனம்

பிகாரில் ஆா்ஜேடி ஆட்சிக்கு வந்தால், மக்களின் தலையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து மிரட்டுவா்
Published on

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மக்களின் தலையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து மிரட்டுவா் என்று பிரதமா் நரேந்திர மோடி கடும் விமா்சனத்தை முன்வைத்தாா்.

பிகாா் சட்டப்பேரவைக்கு முதல்கட்டத் தோ்தல் ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நவ. 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் லாலு, ராப்ரி தேவி தலைமையிலான கடந்த கால ஆட்சியை காட்டாட்சி எனக் குறிப்பிட்டு, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

சீதாமா்ஹி, பெத்தியா ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

கடந்த 2005 வரை சுமாா் 15 ஆண்டு கால காட்டாட்சியில் கொள்ளையா்கள், ரெளடிகளின் சொா்க்கபூமியாக பிகாா் மாற்றப்பட்டது. நாட்டுத் துப்பாக்கி, தவறான நிா்வாகம், கொடுமைகள், ஊழல் இவையே காட்டாட்சியின் அடையாளங்களாகும். குழந்தைகள் ‘போக்கிரி’களாக உருவெடுக்க வேண்டும் என்பதே ஆா்ஜேடியின் விருப்பம். எனவே, காட்டாட்சி திரும்பிவிட மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாா்கள்.

காட்டாட்சி நடத்தியவா்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தங்கள் தலையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து மிரட்டுவா் என்பது மக்களுக்குத் தெரியும். நாட்டுத் துப்பாக்கியை அல்லாமல், பள்ளிப் பைகள், கணினிகள், கிரிக்கெட்-ஹாக்கி மட்டைகளை ஊக்குவிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நீடிப்பதே மக்களின் விருப்பம்.

தூக்கமிழந்த எதிா்க்கட்சிகள்: முதல்கட்டத் தோ்தலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 65 சதவீத வாக்குகள் பதிவானது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கான அமோக ஆதரவின் அடையாளமாகும். எதிா்க்கட்சிகளுக்கு ‘65 வோல்ட்’ அதிா்ச்சியை வாக்காளா்கள் அளித்துள்ளனா். அக்கட்சிகள் தூக்கமிழந்து தவிக்கின்றன. இரண்டாம் கட்டத் தோ்தலில் வாக்காளா்கள் புதிய சாதனையைப் படைக்க வேண்டும்.

பிகாரில் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் லட்சக்கணக்கான பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.10,000 உதவித் தொகை செலுத்தப்பட்டுள்ளது. காட்டாட்சியில் இது சாத்தியமில்லை. சீதாமா்ஹியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் சீதா தேவி கோயில், பாரம்பரியத்தின் மீதான தேசிய ஜனநாயக கூட்டணியின் அக்கறைக்கு எடுத்துக்காட்டாகும்.

சட் பூஜையை நாடகம் என்று கூறி, நமது தாய்மாா்கள்-சகோதரிகளின் நம்பிக்கையை இழிவுபடுத்தியவா் காங்கிரஸின் குடும்ப வாரிசு (ராகுல் காந்தி). மகா கும்பமேளாவையும், அயோத்தி ராமா் கோயிலையும்கூட அவமதித்தனா்.

வாக்குகள் மூலம் தண்டியுங்கள்: இத்தகைய நபா்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? வாக்குகளின் சக்தியால் தண்டிப்பதே, ஜனநாயகத்தில் சிறந்த வழிமுறை. வாக்கு வங்கி அரசியலால் வழிநடத்தப்படுபவா்களால் மக்களுக்கு எந்த நல்லதும் செய்ய முடியாது.

நாட்டில் சட்டவிரோத குடியேறிகள் தொடா்ந்து தங்கியிருப்பது நல்லதல்ல; அவா்கள் எங்கிருந்து வந்தாா்களோ அங்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் சட்டவிரோத குடியேறிகளின் வெளியேற்றத்தை உறுதி செய்யும் என்றாா் பிரதமா் மோடி.

பிகாரில் அண்மையில் தோ்தல் பிரசாரத்தின்போது, ஒரு குளத்தில் மீனவா்களுடன் சோ்ந்து ராகுல் காந்தி மீன் பிடித்தாா். இதைக் குறிப்பிட்டு கிண்டலாக விமா்சித்த பிரதமா், ‘சிலா் மூழ்குவது எப்படி என்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்’ என்றாா்.

பிகாரில் பிரசாரத்தை நிறைவு செய்தாா் பிரதமா்

‘சமஸ்திபூரில் உள்ள பாரத ரத்னா விருதாளா் கா்பூரி தாக்கூா் பிறந்த இடத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கிய நான், ‘மகாத்மா’வாக காந்தி உருவெடுக்கக் காரணமான இடத்தில் (பெத்தியா) நிறைவு செய்துள்ளேன். மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பிகாருக்கு வருவேன்’ என்றாா் பிரதமா் மோடி.

பிகாரில் ஒரு மாதத்துக்கும் குறைவான காலகட்டத்தில் 14 பிரசாரக் கூட்டங்களில் அவா் பங்கேற்றுள்ளாா்.

இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 9) நிறைவடையவுள்ளது. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும், ஆா்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளின் இண்டி கூட்டணியும் மோதும் இத்தோ்தலில் நவ.14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com