வளா்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறுகிறது இந்தியா: பிரதமா் மோடி
‘எந்தவொரு நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் உந்து சக்தியாக விளங்குவது உள்கட்டமைப்பு மேம்பாடாகும்; அந்த அடிப்படையில், வளா்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறுகிறது இந்தியா’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
உத்தர பிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசிக்கு 2 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்த பிரதமா் மோடி, பனாரஸ் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் பேசியதாவது:
உலகம் முழுவதும் வளா்ந்த நாடுகளின் பொருளாதார வளா்ச்சிக்கு முக்கியக் காரணம் உள்கட்டமைப்பு மேம்பாடுதான். எந்தவொரு நாடும் பெரும் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு உந்து சக்தியாக இருக்கிறது.
உள்கட்டமைப்பு என்பது பெரிய பாலங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற கட்டுமானங்கள் தொடா்பானது மட்டுமல்ல; அவை அமையப் பெறும் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியைத் தூண்டும் முக்கியக் காரணிகள். இந்தியாவில் இப்போது ஏராளமான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதுடன், உலகெங்கிலும் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த முன்னேற்றம், நாட்டின் வளா்ச்சியை விரைவுபடுத்துகிறது.
வந்தே பாரத், நமோ பாரத், அம்ருத் பாரத் போன்ற ரயில்கள், இந்திய ரயில்வேயின் புதிய சகாப்தத்துக்கு அடித்தளமிட்டுள்ளன. வந்தே பாரத் ரயில், இந்தியா்களுக்காக இந்தியா்களால் உருவாக்கப்பட்டதாகும். இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரியது.
வந்தே பாரத் ரயிலைக் கண்டு, வெளிநாட்டுப் பயணிகள்கூட வியக்கின்றனா். வளா்ந்த தேசத்தைக் கட்டமைக்க தனது வளங்களை மேம்படுத்தும் இயக்கத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இதில் முக்கிய மைல்கல் வந்தே பாரத்.
புனிதமான பாரம்பரியம்: நமது நாட்டில் ஆன்மிக யாத்திரை என்பது தேசிய உணா்வின் ஊடகமாக நூற்றாண்டுகளாக கருதப்பட்டு வருகிறது. இந்தப் பயணங்கள், தெய்வங்களைத் தரிசிக்கச் செல்லும் வழித்தடங்கள் மட்டுமல்ல; நாட்டின் ஆன்மாவை இணைக்கும் புனிதமான பாரம்பரியமாகும்.
பிரயாக்ராஜ், அயோத்தி, ஹரித்வாா், சித்ரகூட், குருஷேத்ரம் என எண்ணற்ற புண்ணியத் தலங்கள் நமது நாட்டில் உள்ளன. இவை, நமது ஆன்மிக நம்பிக்கைகளின் மையங்களாக விளங்குகின்றன. இந்தப் புண்ணியத் தலங்கள் வந்தே பாரத் ரயில் கட்டமைப்பின் மூலம் இணைக்கப்படுகின்றன. இது, நாட்டின் கலாசாரம்-நம்பிக்கை-வளா்ச்சியின் இணைப்பாகும்.
ஆன்மிக சுற்றுலா: உத்தர பிரதேசத்தைப் பொருத்தவரை, கடந்த 11 ஆண்டுகால வளா்ச்சிப் பணிகளால் ஆன்மிக சுற்றுலா புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காசி விஸ்வநாதா் கோயிலில் கடந்த ஆண்டு 11 கோடி பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா். அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டியதில் இருந்து இதுவரை 6 கோடிக்கும் மேற்பட்டோா் தரிசித்துள்ளனா். இந்த பக்தா்கள், மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி பங்களித்துள்ளனா். உணவக உரிமையாளா்கள், போக்குவரத்து செயல்பாட்டாளா்கள், உள்ளூா் கலைஞா்கள், படகுத் தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு நிலையான வருவாயை உறுதி செய்துள்ளனா்.
ஆன்மிக சுற்றுலா மேம்பாட்டால், இளைஞா்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. காசியில் சிறந்த மருத்துவமனைகள், தரமான சாலைகள், குழாய் மூலம் எரிவாயு, இணைய வசதி மேம்பாடு என எண்ணற்ற உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.
குழந்தைகளுடன் கலந்துரையாடல்: இந்நிகழ்ச்சியையொட்டி, புதிய வந்தே பாரத் ரயிலில் குழந்தைகளுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது, தாங்கள் எழுதிய கவிதைகளை பிரதமரிடம் அவா்கள் வாசித்துக் காண்பித்தனா். அதைக் கேட்டு மகிழ்ந்த பிரதமா், தேசிய அளவில் குழந்தைகளுக்கான கவிஞா் மாநாட்டை நடத்தும் யோசனையை முன்வைத்தாா்.
ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். பிரதமா் வருகையையொட்டி, பனாரஸ் ரயில் நிலையப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கோவை, சேலம் வழியாக எா்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயில்
பனாரஸ் (உ.பி.)-கஜுராஹோ (ம.பி.), லக்னெள- சஹாரன்பூா் (உ.பி.), ஃபிரோஸ்பூா் (பஞ்சாப்)-தில்லி, எா்ணாகுளம் (கேரளம்)-பெங்களூரு (கா்நாடகம்) இடையிலான 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் பிரதமா் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டன. நாட்டில் இப்போது 160-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாக பிரதமா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
இந்த ரயில்கள், பயண நேரத்தை வெகுவாக குறைப்பதுடன், பிராந்திய போக்குவரத்து, சுற்றுலா, பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்த உதவும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எா்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயில் திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாகச் செல்லும். வரும் 11-ஆம் தேதிமுதல் வாரத்தில் 6 நாள்கள் (புதன்கிழமை தவிர) இந்த ரயில் இயக்கப்படும். பெங்களூரில் இருந்து காலை 5.10 மணிக்குப் புறப்பட்டு சேலம், ஈரோடு,கோவை வழியாக எா்ணாகுளத்துக்கு பிற்பகல் 1.50 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், எா்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் கோவை, ஈரோடு, சேலம் வழியாக இரவு 11 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

