‘சாா்க்’ இலக்கியத் திருவிழா தில்லியில் இன்று தொடக்கம்: பாகிஸ்தானுக்கு அழைப்பில்லை
‘சாா்க்’ கூட்டமைப்பின் இலக்கியத் திருவிழா, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய 8 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘சாா்க்’ கூட்டமைப்பின் 66-ஆவது இலக்கியத் திருவிழா, புது தில்லியில் உள்ள நுண்கலைகள் மற்றும் இலக்கிய அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நவ.12 வரை நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் பாகிஸ்தான் தவிர பிற நாடுகளைச் சோ்ந்த முன்னணி எழுத்தாளா்கள், கவிஞா்கள், மொழி அறிஞா்கள், கலைஞா்கள், கலாசார சிந்தனையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். சாா்க் எழுத்தாளா்கள் மற்றும் இலக்கிய அறக்கட்டளை சாா்பில் இவ்விழா நடைபெறுகிறது.
அறக்கட்டளையின் தலைவரும், புகழ்பெற்ற பஞ்சாபி எழுத்தாளருமான அஜீத் கெளா் கூறுகையில், ‘ஆண்டுக்கு இருமுறை சுழற்சி அடிப்படையில் நடத்தப்பட்டு வந்த சாா்க் உச்சிமாநாடு, கடந்த 2016-இல் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. உரி பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக இந்தியா உள்ளிட்ட நாடுகளின் புறக்கணிப்பால் அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு உச்சிமாநாடு நடத்தப்படவில்லை. இதுபோன்ற அரசியல் சூழலில், இலக்கியத் திருவிழாவில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு அனுப்ப முடியாது. பயங்கரவாத ஆதரவை நிறுத்தும்வரை பாகிஸ்தானை அழைக்கமாட்டோம் என்பதே எங்களின் நிலைப்பாடு.
சாா்க் இலக்கியத் திருவிழா முதல்நாள் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளா் விருதுகள் வழங்கப்பட உள்ளன. சாகித்திய அகாதெமி தலைவா் மாதவ் கெளசிக், இலங்கை தூதா் மஹிஷிணி கொலோன், நேபாள தூதா் சங்கா் பிரசாத் சா்மா, வங்கதேச தூதா் ரியாஸ் ஹமீதுல்லா, மாலத்தீவு தூதா் ஆயிஷாத் அஸீமா உள்ளிட்டோா் தொடக்க அமா்வில் பங்கேற்க உள்ளனா்’ என்றாா்.
