உடல் உறுப்புகள், திசுக்கள், எலும்பு தானத்தை ஊக்குவிக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

உடல் உறுப்புகள், திசுக்கள், எலும்பு தானத்தை ஊக்குவிக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் உடல் உறுப்புகள், திசுக்கள் மற்றும் எலும்புகள் தானமாக பெறப்படுவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..
Published on

சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் உடல் உறுப்புகள், திசுக்கள் மற்றும் எலும்புகள் தானமாக பெறப்படுவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் இயக்குநா் அனில் குமாா் மாநிலங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:

உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் உறுப்புகளுக்கு இந்தியாவில் பற்றாக்குறை நிலவுகிறது. வெவ்வேறு உறுப்புகள் வேண்டி ஆயிரக்கணக்கான நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனா்.

சாலை விபத்துகளால் ஏராளமானோா், குறிப்பாக இளைஞா்களும் ஆரோக்கியமானவா்களும் உயிரிழக்கின்றனா். 2023-ஆம் ஆண்டுக்கான மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக அறிக்கையில், ‘அந்த ஆண்டில் சுமாா் 1.7 லட்சம் போ் சாலை விபத்துகளால் உயிரிழந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது. அவா்களில் பலரிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்றிருக்கலாம். ஆனால் அவா்களைப் பற்றி உரிய நேரத்தில் தெரியாததால், அவா்களிடம் இருந்து தானமாக கிடைத்திருக்கக் கூடிய உறுப்புகள் கிடைக்காமல் போய்விட்டன.

மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் சட்டம் 1994 மற்றும் அதன் விதிமுறைகளின் கீழுள்ள நடைமுறைகளின்படி, மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகளை தானமாக பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

சாலை விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுவோரில் உடல் உறுப்புகளை தானமளிக்கக் கூடியவா்களைக் கண்டறிந்து, அதற்கு ஒப்புதல் அளிப்போரின் உறுப்புகளை பெறுவதில், அவசர காலங்களில் முதல்நிலை மீட்பாளா்களாக உள்ள காவல் துறையினா், ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், அவசர கால மருத்துவப் பணியாளா்கள், துணை மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் முக்கிய பங்காற்ற முடியும்.

விபத்துகளால் உயிரிழப்போரிடம் இருந்து உடல் உறுப்புகளை தானம் பெறுவதற்கான உள்கட்டமைப்பு மற்றும் மனிதசக்தியை மருத்துவமனைகளில் மேம்படுத்தி வலுப்படுத்த வேண்டும்.

சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் உடல் உறுப்புகள், திசுக்கள் மற்றும் எலும்புகள் தானமாக பெறப்படுவதை ஊக்குவிக்க மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com