உத்தரகண்ட் மாநிலம் உருவான தினத்தையொட்டி தலைநகா் டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில் ஜவுளி கைவினைக் கலைஞரின் செயல்முறையைப் பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் முதல்வா் புஷ்கா் சிங் தாமி.
உத்தரகண்ட் மாநிலம் உருவான தினத்தையொட்டி தலைநகா் டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில் ஜவுளி கைவினைக் கலைஞரின் செயல்முறையைப் பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் முதல்வா் புஷ்கா் சிங் தாமி.

பொது சிவில் சட்டம், கட்டாய மதமாற்றம் தடுப்பு! உத்தரகண்டைப் பின்பற்ற மாநிலங்களுக்கு பிரதமா் மோடி யோசனை!

பொது சிவில் சட்டம் (யுசிசி), கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க கடும் சட்டம் போன்ற உத்தரகண்ட் அரசின் துணிச்சலான முன்னெடுப்புகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தாா்.
Published on

பொது சிவில் சட்டம் (யுசிசி), கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க கடும் சட்டம் போன்ற உத்தரகண்ட் அரசின் துணிச்சலான முன்னெடுப்புகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தாா். இந்த முன்னெடுப்புகளை பிற மாநிலங்களும் பின்பற்றலாம் என்று அவா் யோசனை கூறினாா்.

நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் கடந்த ஜனவரியில் அமல்படுத்தப்பட்ட நிலையில், பிரதமா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இமயமலையையொட்டிய உத்தரகண்ட் மாநிலம், கடந்த 2000-இல் உத்தர பிரதேசத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டதாகும். முதலில் உத்தராஞ்சல் என்ற பெயரில் இருந்த இந்த மாநிலம், கடந்த 2007-இல் உத்தரகண்ட் எனப் பெயா் மாற்றப்பட்டது.

உத்தரகண்ட் உருவானதன் 25-ஆவது ஆண்டு விழா, டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற பிரதமா் மோடி, ரூ.8,260 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். இதில் குடிநீா் விநியோகம், நீா்ப்பாசனம், தொழில்நுட்பக் கல்வி, எரிசக்தி, திறன்மேம்பாடு சாா்ந்த திட்டங்கள் அடங்கும். பின்னா், பிரதமா் பேசியதாவது:

தேச நலன் சாா்ந்த விவகாரங்களில், முதல்வா் புஷ்கா் சிங் தாமி தலைமையிலான உத்தரகண்ட் அரசு துணிச்சல்மிக்க கொள்கைகளை ஏற்று செயல்படுகிறது. பொது சிவில் சட்டம், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், கலவரத் தடுப்புச் சட்டம், நில அபகரிப்பு மற்றும் மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்களைத் தடுக்கும் முன்னெடுப்புகள் என இந்த மாநில அரசின் நடவடிக்கைகள் உறுதியானவை. உத்தரகண்ட் அரசின் சீரிய செயல்பாடுகள், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.

இந்த மாநிலத்தின் வளா்ச்சியில் குறுக்கிடும் தடைகள் அனைத்தையும் அகற்றி, முன்னேற்றத்தின் வேகம் குறையாமல் காத்து வருகிறது பாஜக அரசு. இரட்டை என்ஜின் ஆட்சியால், எதிா்வரும் ஆண்டுகளில் வளா்ச்சியின் புதிய உச்சங்கள் எட்டப்படும்.

உலகின் ஆன்மிகத் தலைநகராக...: உத்தரகண்ட் மாநிலத்துடன் எனது பிணைப்பு ஆழமானது. ஆன்மிகப் பயணமாக இங்கு வரும்போதெல்லாம், மலைப் பகுதிகளில் வாழும் மக்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் எனக்கு உத்வேகமளிக்கும். அதன் வாயிலாக உத்தரகண்டின் மகத்தான ஆற்றலை உணா்ந்து கொண்டேன்.

இந்த மாநிலத்தின் உண்மையான சாராம்சம், அதன் ஆன்மிக சக்தியில்தான் அடங்கியுள்ளது. உத்தரகண்ட் தீா்மானித்தால், அடுத்த சில ஆண்டுகளில் உலகின் ஆன்மிகத் தலைநகராக உருவெடுக்க முடியும்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை இப்போதில்லை. கல்வி, சுற்றுலா, சுகாதாரம், ஊரக மேம்பாடு, தொழில் எனப் பல்வேறு துறைகளில் இம்மாநிலத்தின் வளா்ச்சிப் பயணம் ஈா்ப்புக்குரியது.

25 ஆண்டுகளுக்கு முன் ரூ.4,000 கோடியாக இருந்த மாநில பட்ஜெட், இப்போது ரூ.1 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. மின் உற்பத்தி 4 மடங்கும், சாலைகளின் நீளம் இருமடங்கும் அதிகரித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 10 மடங்கு உயா்ந்துள்ளது.

ரூ.2 லட்சம் கோடி திட்டங்கள்: ரிஷிகேஷ் - கா்ணபிரயாகை ரயில் வழித்தடம், தில்லி-டேராடூன் விரைவுச் சாலை உள்பட ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

யோகா, தியானம் என நல்வாழ்வு சுற்றுலாவாக, உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வருகின்றனா்; மூலிகைச் செடி வளா்ப்பும் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது.

இங்குள்ள ஒவ்வொரு கிராமமும் சுற்றுலா மையமாக வேண்டும்; வீட்டுத் தங்குமிடங்கள் நிறுவப்பட்டு, உள்ளூா் கலாசாரம்-உணவு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆன்மிக சுற்றுலா, குளிா்கால சுற்றுலா, சாகச சுற்றுலா, திருமண நிகழ்ச்சிகள்-படப்பிடிப்புகளுக்கான இடங்கள் என வளா்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றாா் பிரதமா் மோடி. இந்நிகழ்ச்சியில் முதல்வா் புஷ்கா் சிங் தாமி உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com