

தெலங்கானாவில் 2034 வரை காங்கிரஸ் ஆட்சி செய்யும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பிஆர்எஸ் ஆட்சியை அவர் கடுமையாக விமர்சித்தார். அக்கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் வருடம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் ஈட்டியும் திட்டங்கள் எதுவும் பூர்த்தி செய்யப்படவில்லை. ஹைதராபாத் நகரில் சில மேம்பாலங்கள் உள்பட பல திட்டங்களை நிறைவு செய்ய பிஆர்எஸ் அரசு தவறிவிட்டது.
தெலங்கானாவில் முதலீடு செய்ய விரும்பும் தொழில்கள் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் குஜராத்துக்கு மாற்றப்படுகின்றன. எங்கள் அரசுக்கு மத்திய அரசுடன் சண்டையிட எந்த நோக்கமும் இல்லை. 1994 முதல் 2004 வரை தெலுங்கு தேசம் கட்சி 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது. 2004 முதல் 2014 வரை ஒன்றுபட்ட ஆந்திரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.
2014 முதல் பிஆர்எஸ் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தெலங்கானாவை ஆட்சி செய்தது. மீண்டும் 2024 முதல் 2034 வரை, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும். இது மக்களின் உறுதியான தீர்ப்பு. ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். பாஜக டெபாசிட் தொகையை இழக்கும், பிஆர்எஸ் முற்றிலும் தோல்வியடையும். கடந்த மக்களவைத் தேர்தலில் பிஆர்எஸ் கட்சி மறைமுகமாக பாஜகவை ஆதரித்தது.
பிஆர்எஸ்-பாஜக இணைப்பு தொடங்கிவிட்டதாக சந்திரசேகர் ராவின் மகள் கூறுகிறார். பிஆர்எஸுக்கு கடந்தகாலம் மட்டுமே உண்டு, எதிர்காலம் இல்லை. அதன் 25 ஆண்டுக் காலம் முடிந்துவிட்டது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.