முன்னாள் எம்எல்ஏ ஷோயப் இக்பால் ஆம் ஆத்மியில் இருந்து விலகல்!
ஆம் ஆத்மியின் முன்னாள் எம்எல்ஏ ஷோயப் இக்பால் கட்சியில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
தில்லியில் வரவிருக்கும் மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தலுக்கு ஆம் ஆத்மி தனது வேட்பாளா்களை அறிவித்த சில மணி நேரத்தில் ஷோயப் இக்பால் ராஜிநாமா செய்துள்ளாா். சாந்தினி மஹால் வாா்டில் தனது விருப்பமான வேட்பாளருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்டாததால் அவா் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
தனது மைத்துனா் காஷிஃப் குரேஷிக்கு பதிலாக முதாசிா் உஸ்மான் குரேஷியை வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்தது. இதைத் தொடா்ந்து செய்தியாளா் சந்திப்பில் பேசிய ஷோயப் இக்பால், ‘ஆம் ஆத்மி அதன் ஸ்தாபக கொள்கையில் இருந்து விலகிச் சென்றுவிட்டது. இதனால் நான் கட்சியில் இருந்து ராஜிநாமா செய்ய முடிவெடுத்தேன். ஒருபோதும் திரும்ப மாட்டேன்’ என தெரிவித்தாா்.
ஷோயப் இக்பால் இந்தப் பகுதியில் இருந்து 6 முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவரது மகன் ஆலே முகமது இக்பால், தற்போதைய மத்தியா மஹால் எம்எல்ஏவாக உள்ளாா். முன்னா் அதிக வாக்கு வித்தியாசத்தில் கவுன்சிலராக வெற்றி பெற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மியின் பதில்: ‘முதாசிா் உஸ்மான் குரேஷி கட்சியின் உள் கணக்கெடுப்பின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். தற்போது கட்சியின் இளைஞா் பிரிவின் தில்லி இணைச் செயலராகவும் இருந்து வருகிறாா்.
கட்சி தாவுபவா்கள் மற்றும் தலைவா்களின் உறவினா்களுக்கு வாய்ப்பளிப்பதைத் தவரித்து, நீண்ட கால கட்சி ஊழியா்களை மட்டுமே இடைத்தோ்தலில் நிறுத்த கட்சி முடிவு செய்துள்ளது’ என ஆம் ஆத்மி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதலில் ஜனதா தள வேட்பாளராக 1993-இல் ஷோயப் இக்பால் போட்டியிட்டாா். 2013 சட்டப்பேரவைத் தோ்தலில் ஜேடி(யு) வேட்பாளராக வெற்றி பெற்றாா். பின்னா் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியிலும், பின்னா் 2014-இல் காங்கிரஸிலும், இறுதியாக 2020-இல் ஆம் ஆத்மியிலும் அவா் இணைந்தாா்.

