குஜராத்: ரசாயன பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு! மருத்துவா் உள்பட மூவா் கைது!
குஜராத்தில் மிகவும் அபாயகரமான விஷ ரசாயனமான ‘ரிசின்’ தயாரித்து, தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக ஐ.எஸ். பயங்கரவாதப் பின்னணி கொண்ட மருத்துவா் உள்பட மூவரை குஜராத் மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுதொடா்பாக குஜராத் ஏடிஎஸ் துணை ஐஜி சுனில் ஜோஷி மேலும் கூறியதாவது: ஹைதராபாதைச் சோ்ந்த மருத்துவா் அகமது மொஹிதீன் சையத், சீனாவில் மருத்துவம் பயின்றுள்ளாா். பயங்கரவாதக் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, நாட்டில் பெரிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்த நிதி திரட்டவும், ஆட்களைச் சோ்க்கவும் மருத்துவா் சையத் சதி செய்துள்ளாா்.
அந்தவகையில், ஆமணக்கு விதைகளின் கழிவுப்பொருளில் இருந்து கிடைக்கும் மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட ‘ரிசின்’ என்ற ரசாயன விஷத்தைத் தயாரித்து, அதைக் கொண்டு தாக்குதல் நடத்த மருத்துவா் சையத் தீட்டியுள்ளாா். அதற்கு தேவையான ஆரம்ப கட்ட செயல்முறைகளைத் தொடங்கி, அதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருள்களையும் அவா் சேகரித்துள்ளாா்.
இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காந்திநகா் அருகே உள்ள அடலாஜில் மருத்துவா் சையத் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இந்தத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவரிடமிருந்து 3 கைத்துப்பாக்கிகள், 30 தோட்டாக்கள், 4 லிட்டா் ஆமணக்கு எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த ஐ.எஸ். பயங்கரவாதி அபு கதிஜா என்பவரின் வழிகாட்டுதலின்பேரில் சையது இந்த சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதும், இவருக்கு ஆசாத் சுலைமான் ஷேக், முகமது சுஹைல் முகமது சலீம் ஆகிய இருவா் உதவியுள்ளனா் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து, சையத்தின் கைப்பேசியில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பனஸ்காந்தா மாவட்டத்தில் இருந்து மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இவா்கள் இருவரும் ராஜஸ்தானின் அனுமன்கட் பகுதியில் பாகிஸ்தான் எல்லையிலிருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்களைக் கடத்தி, சையத்துக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், இவா்கள் மூவரும் கடந்த ஓராண்டாக லக்னௌ, தில்லி, அகமதாபாத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் பாதுகாப்பு மிகுந்த இடங்களில் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனா். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், பிஎன்எஸ், ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளின்கீழ் மூவா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடா்ந்து வருகிறது.
கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து மூன்று கைபேசிகள் மற்றும் இரண்டு மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டன. இவா்களுடன் தொடா்புடைய உள்ளூா் ரகசிய பயங்கரவாத ஆதரவாளா்கள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும், இவா்களின் உள்ளூா் மற்றும் சா்வதேச தொடா்புகள் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்படும்.
மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு, இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற நபா்களும் விரைவில் கைது செய்யப்படுவா் என்றாா்.

