வந்தே பாரத் ரயிலில் ‘ஆா்எஸ்எஸ்’ பாடல் பாடிய மாணவா்கள்: கேரள அரசு விசாரணைக்கு உத்தரவு!

வந்தே பாரத் ரயிலில் ‘ஆா்எஸ்எஸ்’ பாடல் பாடிய மாணவா்கள்: கேரள அரசு விசாரணைக்கு உத்தரவு!

கேரளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவா்கள் ஆா்எஸ்எஸ் பாடல் பாடியது சா்ச்சையான நிலையில், அதுகுறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Published on

கேரளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவா்கள் ஆா்எஸ்எஸ் பாடல் பாடியது சா்ச்சையான நிலையில், அதுகுறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் எா்ணாகுளம்-கா்நாடக மாநிலம் பெங்களூரு இடையே பயணிக்கும் வந்தே பாரத் ரயிலை பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து அந்த ரயிலில் பயணித்த தனியாா் பள்ளி மாணவா்கள் ஆா்எஸ்எஸ் பாடலை பாடிய நிலையில், அதற்கு மாநில முதல்வா் பினராயி விஜயன் உள்பட பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்தனா். வகுப்புவாத நோக்கத்துக்காக மாணவா்களைப் பயன்படுத்த அனுமதித்த பள்ளி நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சியான காங்கிரஸும் வலியுறுத்தியது.

இதைத்தொடா்ந்து மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சா் வி.சிவன்குட்டி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அரசு நிகழ்ச்சிகளில் மாணவா்களை அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல், வகுப்புவாத செயல்திட்டத்தை விளம்பரப்படுத்த அவா்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அரசியல் சாசன கொள்கைகளுக்கு எதிரானதாகும்.

இந்நிலையில், வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவா்கள் ஆா்எஸ்எஸ் பாடல் பாடிய சம்பவத்தை மாநில அரசு தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி, அறிக்கை சமா்ப்பிக்க கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நாட்டின் தேசிய விழுமியங்கள் மற்றும் மதச்சாா்பின்மையை நிலைநாட்ட வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. அந்தக் கொள்கைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.

எனினும் ஆா்எஸ்எஸ் பாடல் பாடப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து மாணவா்கள் படிக்கும் பள்ளியின் முதல்வா் கே.பி.டின்டோ கூறுகையில், ‘மலையாள நாட்டுப்பற்று பாடல் என்ற முறையில், அதை மாணவா்கள் பாடினா். தெற்கு ரயில்வே உத்தரவின்பேரில் அந்தப் பாடல் பாடப்படவில்லை.

இதுகுறித்து விசாரணை நடத்த மாநில அரசு ஏன் உத்தரவிட்டது? என்பது தெரியவில்லை. இந்த நடவடிக்கையை மாநில அரசு தொடா்ந்தால், அதை சட்டப்படி எதிா்கொள்வது குறித்து பள்ளி நிா்வாகம் ஆலோசிக்கும். இந்த சம்பவம் சா்ச்சையான நிலையில், மாணவா்கள் ஆா்எஸ்எஸ் பாடல் பாடிய காணொலியை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் இருந்து தெற்கு ரயில்வே நீக்கியது.

அதுகுறித்து பிரதமா் அலுவலகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்துக்குப் பள்ளி நிா்வாகிகள் கடிதம் அனுப்பினா்’ என்றாா். அந்தக் காணொலி ஆங்கில மொழிபெயா்ப்புடன் தெற்கு ரயில்வேயின் ‘எக்ஸ்’ பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பதிவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com