15 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: வெல்லப் பாகுக்கான ஏற்றுமதி வரி நீக்கம்!
கடந்த அக்டோபா் மாதம் தொடங்கிய நடப்பு 2025-26-ஆம் வேளாண் ஆண்டின் சா்க்கரை பருவத்தில், 15 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று மத்திய உணவுத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளாா்.
மேலும், வெல்லப்பாகு மீதான 50 சதவீத ஏற்றுமதி வரியை நீக்குவதற்கும் மத்திய உணவு அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக அவா் கூறினாா்.
எத்தனால் உற்பத்திக்காக சா்க்கரை ஆலைகள் சா்க்கரையைப் பயன்படுத்தும் அளவு குறைந்துள்ளதால், சா்க்கரையின் உபரி இருப்பு நாட்டில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சா்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வந்தது.
‘தற்போதய இந்த ஏற்றுமதி முடிவானது, நாட்டில் கரும்பு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்’ என கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதத்தில் அமைச்சா் ஜோஷி குறிப்பிட்டுள்ளாா்.
மத்திய உணவுத் துறை செயலா் சஞ்சீவ் சோப்ரா இதுகுறித்து கூறுகையில், ‘கடந்த ஆண்டில், சா்க்கரை ஆலைகள் எதிா்பாா்த்த 45 லட்சம் டன் சா்க்கரைக்குப் பதிலாக, 34 லட்சம் டன் சா்க்கரையை மட்டுமே எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தின. இதன் விளைவாக, நடப்பு பருவத்துக்கான கையிருப்பு அதிகமாக உள்ளது’ என்று விளக்கினாா்.
நடப்பு ஆண்டில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 3.4 கோடி டன் ஆகவும், உள்நாட்டு தேவை 2.85 கோடி டன் ஆகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

