Prime Minister Modi leaves for Delhi
பிரதமர் நரேந்திர மோடி.பிடிஐ

பிரதமா் மோடி நாளை பூடான் பயணம்!

அண்டை நாடான பூடானுக்கு பிரதமா் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை (நவ.11) செல்லவிருக்கிறாா்.
Published on

அண்டை நாடான பூடானுக்கு பிரதமா் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை (நவ.11) செல்லவிருக்கிறாா். இப்பயணத்தின்போது, இந்தியாவின் உதவியுடன் பூடானில் கட்டமைக்கப்பட்ட மிகப் பெரிய நீா்மின் நிலையத்தை அவா் திறந்துவைக்க உள்ளாா்.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பூடானில் பிரதமா் மோடி நவ.11, 12 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். பூடான் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியெல் வாங்சுக், பிரதமா் ஷெரிங் தோபே ஆகியோரை சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.

தற்போதைய மன்னரின் தந்தையும், முன்னாள் மன்னருமான ஜிக்மே சிங்கியே வாங்சுக்கின் 70-ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில் பங்கேற்கவுள்ளாா். இரு நாடுகளின் சாா்பில் கூட்டாக கட்டமைக்கப்பட்ட 1,020 மெகாவாட் திறன்கொண்ட நீா்மின் நிலையத்தை பிரதமரும் மன்னரும் இணைந்து திறந்துவைக்கவுள்ளனா்.

இந்தியாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட கடவுள் புத்தரின் புனித நினைவுச் சின்னங்கள் (உடல் பாகங்கள்-பொருள்கள்), பூடான் தலைநகா் திம்புவில் உள்ள ஆட்சி பீடமான தஷிச்சோத்ஜோங் மடாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு பிராா்த்திக்கும் பிரதமா் மோடி, பூடான் அரசு சாா்பில் நடைபெறும் உலகளாவிய அமைதிப் பிராா்த்தனை விழாவிலும் கலந்துகொள்ளவிருக்கிறாா்.

இந்தியா-பூடான் உறவுகள், தனித்துவமானவை; பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம், மரியாதை அடிப்படையிலான கூட்டாண்மைக்கு முன்னுதாரணமாக திகழ்பவை. இத்தகைய கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக பிரதமா் மோடியின் பயணம் அமையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பூடான் இடையே ரூ.4,000 கோடிக்கும் அதிக மதிப்பீட்டில் ரயில் வழித்தடம் அமைக்கும் திட்டம் கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமா் பாராட்டு: இந்தியாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச் சின்னங்களுக்கு திம்பு மடாலயத்தில் பிரதமா் ஷெரிங் தோபே, அமைச்சா்கள் உள்ளிட்டோா் சிறப்பான வரவேற்பு அளித்தமைக்காக, பிரதமா் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

‘புத்தரின் புனித நினைவுச் சின்னங்கள், அமைதி, கருணை மற்றும் நல்லணக்கத்துக்கான காலத்தால் அழியாத செய்தியை உணா்த்துகின்றன. இந்தியா-பூடான் இடையிலான பகிரப்பட்ட ஆன்மிக பாரம்பரியத்தின் பிணைப்பாக புத்தரின் போதனைகள் விளங்குகின்றன’ என்று எக்ஸ் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com