மத்திய அரசு அலுவலகங்களில் கழிவுகளை அகற்றியதால் ரூ.4,100 கோடி வருவாய்!
மத்திய அரசின் தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு அலுவலகங்களில் சோ்ந்திருந்த பழைய பொருள்கள், மின்னணு சாதனங்கள் போன்ற கழிவுகளை அகற்றியதன்மூலம் அரசுக்கு ரூ.4,088.53 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.
நிகழாண்டு மட்டும் இதன் மூலம் ரூ.788.53 கோடி கிடைத்தது என்றும் இது சந்திரயான்-3 திட்டச் செலவுக்கானதைவிட அதிகமாகும் என்றும் அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறினாா்.
அவா் மேலும் கூறியதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 5 முறை இந்தச் சிறப்புத் தூய்மை இயக்கம் (ஸ்வச்சதா) நடத்தப்பட்டு, இதுவரை ரூ.4,088.53 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரை ரூ.3,300 கோடி வருவாய் கிடைத்திருந்தது. இந்த ஆண்டு அக்டோபா் மாதம் 2 முதல் 31-ஆம் தேதிவரை நடத்தப்பட்ட தூய்மை இயக்கத்தின் முடிவில் கூடுதலாக ரூ.788.53 கோடி கிடைத்தது.
நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் சுமாா் 231.75 லட்சம் சதுர அடி இடம், பழைய கோப்புகள், உடைந்த பொருள்களால் மற்றும் பிற கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த இடங்களில் கழிவுகள் அகற்றப்பட்டதால், வேறு பயனுள்ள பயன்பாட்டிற்காகக் கிடைத்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக மின்னணு கழிவுகளை அகற்றுவதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
அலுவலகக் கழிவுகளை விற்பதன் மூலம் கிடைத்துள்ள இந்த ரூ.4088.53 கோடி வருவாய், ஒரு பெரிய விண்வெளித் திட்டத்தின் அல்லது பல ‘சந்திரயான்’ திட்டங்களின் செலவை ஈடுகட்டப் போதுமானது. கழிவுகள் அகற்றப்பட்டு காலியாகியுள்ள இடத்தில் ஒரு பெரிய வா்த்தக வளாகத்தை அமைக்கலாம் என்று குறிப்பிட்டாா்.
இந்த ஆண்டு தூய்மை இயக்கம் நடைபெற்ற போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ‘கழிவிலிருந்து செல்வம்’ எனும் திட்டத்தையும் செயல்படுத்தியது. இதில், மருத்துவமனைக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்தல், மற்றும் சாலைகள் அமைக்க இரும்புக் கசடுகளைப் பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

