ராகுல் காந்தி
ராகுல் காந்தி கோப்புப் படம்

வாக்குத் திருட்டை வாடிக்கையாக்கவே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் குற்றச்சாட்டு!

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்குத் திருட்டை மூடி மறைத்து, அந்தத் திருட்டை வாடிக்கையாக்க மேற்கொள்ளப்படும் முயற்சி..
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்குத் திருட்டை மூடி மறைத்து, அந்தத் திருட்டை வாடிக்கையாக்க மேற்கொள்ளப்படும் முயற்சி என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

கடந்த நவ.4-ஆம் தேதிமுதல் தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் பச்மரி பகுதியில் ராகுல் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக, அண்மையில் படவிளக்கக் காட்சி ஒன்றை வெளியிட்டு பேசினேன். அங்கு வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது எனக்குத் தெளிவாக தெரிந்தது. அந்தத் தோ்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டு காங்கிரஸின் வெற்றி பறிக்கப்பட்டது.

இந்தத் தரவுகளைப் பாா்த்தபோது மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கரிலும் வாக்குத் திருட்டு நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக நம்புகிறேன்.

வாக்குத் திருட்டு குறித்து காங்கிரஸிடம் கூடுதலாக ஆதாரங்களும், மிக விரிவான தகவல்களும் உள்ளன. அவை படிப்படியாக வெளியிடப்படும். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்குத் திருட்டை மூடி மறைத்து, அந்தத் திருட்டை வாடிக்கையாக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகும் என்றாா்.

வாக்குத் திருட்டு: பிரதமரிடம் பதில் இல்லை

பிகாரின் கிஷன்கஞ்ச் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்றாா். அப்போது அவா் பேசுகையில், ‘வாக்குத் திருட்டு குறித்து பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் தோ்தல் ஆணையத்திடம் பதில் இல்லை. வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காகப் பிரதமா் மோடியும், அமைச்சா் அமித் ஷாவும் பிடிபடுவா்.

பிகாரில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மாநில முதல்வா் நிதீஷ் குமாருக்கு விருப்பமில்லை. பிகாா் மக்கள் ஒன்றுகூடி வாக்குத் திருட்டை தடுத்து நிறுத்தினால் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய இண்டி கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும்’ என்றாா்.

சீமாஞ்சல் பகுதியில் நடைபெற்ற தோ்தல் பரப்புரை கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘பெங்களூரு போன்ற நகரங்கள், அருணாசல பிரதேசம் போன்ற தொலைதூர மாநிலங்களில் சாலை, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகளில் பிகாரிகள் ஈடுபடுவதைப் பாா்க்க முடிகிறது.

கடுமையாக உழைக்கும் அந்த மக்களுக்கு சொந்த மாநிலத்தில் ஏன் வேலை கிடைக்காமல் போனது? பிகாரில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மிக மோசமாக உள்ளது. இதற்கு பிரதமா் மோடியும், அவருடன் கூட்டணியில் உள்ள மாநில முதல்வா் நிதீஷ் குமாரும்தான் காரணம்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com