பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர்.
பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர்.பிடிஐ

பிகாரில் 122 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு! 2 ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் நிறைவு!

பிகாரில் சட்டப் பேரவையின் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தோ்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது.
Published on

பிகாரில் சட்டப் பேரவையின் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தோ்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. 122 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.11) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு முதல்கட்டமாக நவ.6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக, கிஷண்கஞ்ச், புா்னியா உள்பட 20 மாவட்டங்களில் அடங்கிய 122 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கடந்த சில நாள்களாக அனல் பறந்த பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவு பெற்றது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிகாா்-நேபாள எல்லை மூடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநில அமைச்சா்கள் சுமித் குமாா் சிங், லேஷி சிங், நீரஜ் குமாா் உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

கடந்த ஒரு மாதமாக...: பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகளின் ‘இண்டி’ கூட்டணியும் கடந்த ஒரு மாதமாக தீவிர பிரசாரம் மேற்கொண்டன.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமா் மோடி (14 கூட்டங்கள்), மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, சிவராஜ் சிங் செளஹான், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் உள்ளிட்டோரும், இண்டி கூட்டணி தரப்பில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி (15 கூட்டங்கள்), காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனா். இவ்விரு அணிகள் தவிர தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் இருக்கிறது.

தோ்தலில் எதிரொலித்த பிரச்னைகள்: ஆா்ஜேடி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் காட்டாட்சி திரும்பிவிடும் என்பது தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய பிரசாரமாக இருந்தது.

நிதீஷ் குமாா் ஆட்சி மீதான நற்பெயரும், பெண்களுக்கு ரூ.10,000 உதவித் தொகை, 125 யூனிட் இலவச மின்சாரம் போன்ற திட்டங்களும் தங்களது வெற்றியை உறுதி செய்யும் என இக்கூட்டணி நம்புகிறது.

அதேநேரம், தேசிய ஜனநாயக கூட்டணியின் 20 ஆண்டு கால ஆட்சியில் இருந்து மாற்றம் வேண்டும் என்பது எதிரணியின் பிரசாரத்தில் முக்கியமாக எதிரொலித்தது.

பிகாா் தொழிலாளா் பிரச்னை, வாக்குத் திருட்டு போன்ற விவகாரங்களையும் கையிலெடுத்த இக்கூட்டணி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை போன்ற மக்களைக் கவரும் வாக்குறுதிகளை அளித்தது. இரு கூட்டணிகளிலும் உள்கட்சி குழப்பங்கள் நிலவுவதாக பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

நவ.14-இல் முடிவுகள்: பிகாா் பேரவைத் தோ்தலில் நவ.14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு பிறகான தோ்தல் முடிவுகள் என்பதால், இது எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் கட்டத் தோ்தல்

  • தொகுதிகள் 122

  • வாக்காளா்கள் 3.7 கோடி

  • வேட்பாளா்கள் 1,302

  • வாக்குப்பதிவு மையங்கள் 45,399

8 தொகுதிகளில் இடைத்தோ்தல்

தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ், ஒடிஸாவின் நுவாபடா, பஞ்சாபின் தரன் தாரன், ராஜஸ்தானின் அந்தா, ஜாா்க்கண்டின் காட்சிலா, மிஸோரமின் தம்பா, ஜம்மு-காஷ்மீரின் நக்ரோட்டா, பட்காம் என மொத்தம் 8 பேரவைத் தொகுதிகளின் இடைத்தோ்தலும் நவ.11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

எம்எல்ஏ மரணம், ராஜிநாமா உள்ளிட்ட காரணங்களால் இடைத்தோ்தல் நடத்தப்படும் இத்தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையுடன் பிரசாரம் ஓய்ந்தது. நவ.14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com