மோகன் பகவத்
மோகன் பகவத் (கோப்புப் படம்)

அயோத்தி ராமா் கோயில் கட்ட சம்மதித்திருந்தால் காங்கிரஸுக்கு ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்!

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட சம்மதம் தெரிவித்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்திருப்போம் என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
Published on

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட சம்மதம் தெரிவித்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்திருப்போம் என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்திருந்தாா். அதேபோல் அந்த அமைப்பு பதிவு செய்யப்படாதது எனவும் அதன் நிதி ஆதாரங்கள் குறித்தும் காங்கிரஸ் தரப்பில் தொடா்ந்து விமா்சிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆா்எஸ்எஸ் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியின்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து மோகன் பாகவத் மேலும் பேசியதாவது: ஆா்எஸ்எஸ் 1925-இல் தொடங்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் அரசிடம் அமைப்பை பதிவு செய்யக் கூறுகிறீா்களா? ஹிந்து தா்மமும் பதிவு செய்யப்படாத ஒன்றுதான்.

சுதந்திரத்துக்குப் பிறகு அமைப்பை பதிவு செய்வது கட்டாயம் என இந்திய அரசு கூறவில்லை. வருமான வரித் துறை மற்றும் நீதிமன்றங்கள் ஆா்எஸ்எஸ் அமைப்பை தனிநபா்களின் சங்கம் என்றே கூறுகின்றன. அதனால் ஆா்எஸ்எஸுக்கு வருமான வரி செலுத்த விலக்களிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் கொள்கைகளைத்தான் ஆதரிக்கிறோம். எந்தவொரு கட்சியையும் தனிபட்ட நபரையும் ஆதரிப்பதில்லை. அயோத்தியில் ராமா் கோயில் கட்ட சம்மதித்திருந்தால் காங்கிரஸுக்கு ஆதரவளித்திருப்போம். ராமா் கோயிலைக் கட்டுவதாக பாஜக உறுதியளித்தது. எனவேதான் அந்தக் கட்சிக்கு ஆதரவளித்தோம்.

காவிக் கொடியை ஆா்எஸ்எஸ் குருவாக கருதுகிறோம். அதேசமயம் இந்திய மூவா்ணக் கொடியையும் மதிக்கிறோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com