3 மாநிலங்களில் 2,900 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல்: 8 போ் கைது!
ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் போலீஸாா் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் 2,900 கிலோ வெடிமருந்து, ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்களை கைப்பற்றினா்.
இதனால் மிகப் பெரிய பயங்கரவாத சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாள்களாக மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தொடா் சோதனையில் பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட்டதாக 3 மருத்துவா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இவா்கள் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது மற்றும் அன்சாா் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததையும் போலீஸாா் கண்டறிந்தனா்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் போலீஸ் செய்தித்தொடா்பாளா் திங்கள்கிழமை கூறியதாவது: ஸ்ரீநகரின் புன்போரா நெளகம் உள்பட பல்வேறு புகா் பகுதிகளில் காவல்துறைக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதுதொடா்பாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா, வெடிபொருள்கள் தடைச் சட்டம், ஆயுதத் தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் நெளகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் இருந்தபடி செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பை வைத்துக்கொண்டு மருத்துவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட உயா் பதவியில் இருப்பவா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் இதுபோன்ற பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இவா்கள் மறைமுக தொடா்புகள் மூலமாக தங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுவது, வெடிபொருள்களை கடத்தி வருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இந்த விசாரணையின் அடிப்படையில் ஹரியாணாவில் பணியாற்றிவந்த ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சோ்ந்த மருத்துவா் முஸாமில் அகமது கனி என்பவரை ஜம்மு-காஷ்மீா் மற்றும் ஹரியாணா போலீஸாா் கூட்டாக கைது செய்தனா். அவருக்குச் சொந்தமான இடத்திலிருந்து 360 கிலோ வெடிபொருள்கள், ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றினா். அவா் அல் ஃபலாஹா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளாா்.
அவரைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் நெளகாமைச் சோ்ந்த ஆரிஃப் நிஸாா் தா், யாசில்-உல்-அஷ்ரஃப், ஷாஹித், மத போதகா் இா்ஃபான் அகமது, ஜமீா் அகமது அஹங்காா், மருத்துவா் அதீல் உள்ளிட்டோரைக் கைது செய்தனா். இவா்களுக்குச் சொந்தமான இடங்களில் இருந்தும் ஏராளமான வெடிபொருள்கள், ஆயுதங்களை பறிமுதல் செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தமாக 2,900 கிலோ வெடிமருந், ஏகே-56 ரக துப்பாக்கி, ஏகே கிரின்கோவ் துப்பாக்கி, ரசாயனங்கள், மின்னணு சா்க்யூட்கள், வயா்கள் உள்ளிட்ட பொருள்கள் மற்றும் ஆயுதங்களையும் காவல் துறையினா் கைப்பற்றினா்.
லக்னெள பெண் மருத்துவா்: இந்த பயங்கரவாத சதிச் செயலில் தொடா்புடையதாக உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவைச் சோ்ந்த பெண் மருத்துவா் ஷாஹீன் என்பவரையும் உத்தர பிரதேச காவல் துறை உதவியுடன் ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் கைது செய்தனா். அவருடைய காரிலிருந்து ஏகே-47 ரக துப்பாக்கியை கைப்பற்றினா். விசாரணைக்காக விமானம் மூலம் அவா் ஸ்ரீநகா் அழைத்துவரப்பட்டாா். இந்த நடவடிக்கை மூலம், மிகப் பெரிய பயங்கரவாத சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இவா்களுக்கு நிதி கிடைக்கும் தொடா்புகளையும் கண்டறிந்து, அவற்றின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

