

புது தில்லி: ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா காவல்துறை இணைந்து நடத்திய சோதனையில், கண்ணிவெடித் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிபொருளான 360 கிலோ அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஃபரிதாபாத் மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டதால் அங்குதான் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. பிறகு, மருத்துவர் வாடகைக்கு இருந்த வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக விளக்கம் வெளியானது.
ஃபரிதாபாத் அருகே நடத்தப்பட்ட விசாரணையின்போது, இந்த அளவுக்கு வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், முஸாம்மில் என்ற மருத்துவர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதலில், கைப்பற்றப்பட்ட வெடிபொருள் ஆர்டிஎக்ஸ் என்று கூறப்பட்டது. ஆனால், பிறகு, அது அம்மோனியம் நைட்ரேட் என்று ஃபரிதாபாத் காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் அதீல் அகமது ராத்தர் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து ஃபரிதாபாத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் காவல்துறையினர் சோதனையிட்டபோதுதான், இந்த அளவுக்கு வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பெரிய பெரிய பெட்டிகள் மற்றும் பக்கெட்டுகளில் வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனுடன் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது-
மேலும், வெடிபொருள்களைப் பதுக்கி வைக்க உதவியக் குற்றத்துக்காக புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மருத்துவரான முஸாமில் ஷகீல் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இருவரும் ஜம்மு - காஷ்மீர் காவல்துறையின் விசாரணையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் நாட்டில் மிகப்பெரிய சதி வேலையில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இரு மருத்துவர்களும் அவ்வப்போது சென்று வந்த இடங்களிலும் காவல்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முன்னதாக, குஜராத்தில் மிகவும் அபாயகரமான விஷ ரசாயனமான ‘ரிசின்’ தயாரித்து, தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதும் இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக ஐ.எஸ். பயங்கரவாதப் பின்னணி கொண்ட மருத்துவா் உள்பட மூவரை குஜராத் மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) காவல் துறையினா் கைது செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.