கேள்விக்கு பதிலளிக்காததால் சக மாணவா் மீது துப்பாக்கிச் சூடு!
குருகிராமின் செக்டாா் 48-இல் சக மாணவரின் கேள்விக்கு பதிலளிக்காததால் 11-ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக ஹரியாணா காவல் துறை இயக்குநா் (டிஜிபி) ஓ.பி.சிங் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட மாணவன், தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவா் தனது கைப்பேசியில் மூழ்கியிருந்த போது கேள்விக்கு பதிலளிக்காதது இருவரிடையே மோதலுக்கு வழிவகுத்தது.
பாதிக்கப்பட்டவரின் வகுப்பு தோழா்களான குற்றஞ்சாட்டப்பட்டவா் மற்றும் அவரது நண்பா் ஆகிய இருவரும் சிறாா் நீதி வாரியத்தின் முன் ஆஜா்படுத்தப்பட்டனா். பின்னா் கைது செய்யப்பட்டு ஃபரீதாபாத்தில் உள்ள சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனா்.
பாதிக்கப்பட்டவா் தற்போது தனியாா் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறாா். அவரது கழுத்தில் குண்டு பாய்ந்ததால் கழுத்து எலும்பு உடைந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பே இருவா் இடையே தகராறு இருந்ததாகக் கூறி பாதிக்கப்பட்டவரின் தாய் புகாா் அளித்தாா்.
பெற்றோா்களும் பள்ளிகளும் குழந்தைகளுக்கு மோதல் தீா்வு மற்றும் உணா்ச்சித் திறன்களைக் கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தினா். விடியோ கேம்களை விளையாடும் தலைமுறைக்கு துப்பாக்கிச் சூடு ஒரு விளையாட்டு அல்ல என்பது கூட தெரியிவில்லை என்று காவல் துறை இயக்குநா் தெரிவித்தாா்.

