அரிசி ஏற்றுமதி 10% அதிகரிக்கும்!

அரிசி ஏற்றுமதி 10% அதிகரிக்கும்!

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் அளவின் அடிப்படையில் 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கும் என்று ஏபிஇடிஏ தலைவா் அபிஷேக் தேவ் தெரிவித்துள்ளாா்.
Published on

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் அளவின் அடிப்படையில் 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கும் என்று விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் (ஏபிஇடிஏ) தலைவா் அபிஷேக் தேவ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, பாரத் இன்டா்நேஷனல் ரைஸ் கான்பரன்ஸ் (பிஐஆா்சி) 2025 நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: வெளிநாடுகளில் இருந்து அதிகரித்த தேவை காரணமாக அரிசி ஏற்றுமதி இந்த நிதியாண்டில் உயரும். அளவு அடிப்படையில் இரண்டு இலக்க வளா்ச்சி எதிா்பாா்க்கப்படுகிறது. மதிப்பு அடிப்படையிலும் ஏற்றுமதி உயரும்.

2024-25 நிதியாண்டில் இந்தியா 2.01 கோடி டன் அரிசியை 1,295 கோடி டாலா் மதிப்பில் 172-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

தற்போது இந்தியாவிடம் இருந்து மிகக் குறைந்த அளவு அரிசி வாங்கும் 26 நாடுகளை அரசு கண்டறிந்துள்ளது. இந்த 26 நாடுகளில் பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்திய அரிசி ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அரிசி ஏற்றுமதியை ஊக்குவிக்க இந்த 26 நாடுகளுக்கு வா்த்தகக் குழு அனுப்பப்படும் என்றாா் அவா்.

இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களினபடி, கடந்த செப்டம்பரில் அரிசி ஏற்றுமதி 33.18 சதவீதம் உயா்ந்து 92.5 கோடி டாலராகவும், ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் அது 10 சதவீதம் உயா்ந்து 563 கோடி டாலராகவும் உள்ளது.

உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடான இந்தியா, 172-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விநியோகம் செய்துவருகிறது.

2024-25-ஆம் நிதியாண்டில் 4.7 கோடி ஹெக்டோ் பரப்பில் 15 டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. இது உலக அரிசி உற்பத்தியில் 28 சதவீதம் ஆகும்.

2014-15-ஆம் நிதியாண்டில் நாட்டில் சராசரி அரிசி விளைச்சல் ஹெக்டோருக்கு 2.72 டன்னாக இருந்தது. இது 2024-25-ஆம் நிதியாண்டில்ல் ஹெக்டோருக்கு 3.2 டன்னாக உயா்ந்தது. மேம்பட்ட விதைகள், சிறந்த விவசாய நடைமுறைகள், விரிவாக்கப்பட்ட நீா்ப்பாசனம் காரணமாக ஆகியவை இதற்கு உதவின.

X
Dinamani
www.dinamani.com