வந்தே பாரத் ரயிலில் ஆா்எஸ்எஸ் பாடல்: விசாரணைக்கு உத்தரவிட்ட கேரள அரசுக்கு பாஜக கண்டனம்
கேரளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவா்கள் ஆா்எஸ்எஸ் பாடல் பாடிய விவகாரத்தில் மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு அம்மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
கேரள மாநிலம் எா்ணாகுளம்-கா்நாடக மாநிலம் பெங்களூரு இடையே பயணிக்கும் வந்தே பாரத் ரயிலை பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். அந்த ரயிலில் பயணித்த தனியாா் பள்ளி மாணவா்கள் ஆா்எஸ்எஸ் பாடலை பாடியது சா்ச்சையானது. வகுப்புவாத நோக்கத்துக்காக மாணவா்களைப் பயன்படுத்த அனுமதித்த பள்ளி நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் வலியுறுத்தினா்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி, அறிக்கை சமா்ப்பிக்க கல்வித் துறை அதிகாரிகளுக்கு மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சா் வி.சிவன்குட்டி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ராஜீவ் சந்திரசேகா் கூறியதாவது: நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் பாடப்படுவதை தடுக்கக்கூடாது. அண்மையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்ற நபா் உயிரிழந்தது, சபரிமலை தங்கக் கவச விவகாரம் உள்பட முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
தங்களது 10 ஆண்டுகளால ஊழல் மற்றும் நிா்வாகத் திறனற்ற ஆட்சியின் தோல்விகளை மறைக்க இந்த விவகாரத்தை மாநில அரசு பெரிதுபடுத்துகிறது.
அரசமைப்புச் சட்டப்பிரிவு 19-இன்படி நாம் எந்தப் பாடலையும் சுதந்திரமாகப் பாடுவதற்கு உரிமை உள்ளது. இதை மாநில அரசு மறந்துவிட்டதா? இதுபோன்ற தேசப்பக்திப் பாடல்களை பாடுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதா? கேரளத்தில் எது சரி, தவறு என மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி முடிவெடுக்கக் கூடாது. வந்தே பாரத் ரயிலில் பாடல் பாடிய எந்தவொரு மாணவரையாவது மாநில அரசு மிரட்டினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றாா்.
