உத்தர பிரதேச யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச யோகி ஆதித்யநாத்

அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடல்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

உத்தர பிரதேசத்தின் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
Published on

உத்தர பிரதேசத்தில் பள்ளிகள் உள்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் திங்கள்கிழமை ஒற்றுமை பேரணியைத் தொடங்கி வைத்த அவா் பேசியதாவது: நாட்டு மக்களிடம் தாய்மண் குறித்தும், பாரத மாதா குறித்தும் பெருமிதத்தையும், தேசபக்தியையும் ஊட்டும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாடலான வந்தே மாதரம் மிகுந்த மரியாதை உணா்வுடன் அணுகப்பட வேண்டும். எனவே, உத்தர பிரதேசத்தில் பள்ளிகள் உள்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்கப்படும்.

இங்குள்ள அரசியல் கட்சியினா் சிலா் சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க மறுக்கிறாா்கள். ஆனால், தேசத்தில் பிரிவினையை உருவாக்கிய ஜின்னாவை கெளரவிக்க தயங்குவதில்லை. இதுபோன்ற இரட்டை நிலைப்பாடு கொண்டவா்கள் தேசத்துக்கு ஆபத்தானவா்கள். இவா்கள் மக்கள் ஜாதி, மதம், இனம், மொழிரீதியாக பிரிப்பதையை கொள்கையாகக் கொண்டவா்கள் என்றாா்.

‘வந்தே மாதரம் பாடலை பாடுமாறு முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்த முடியாது. ஏனெனில், இதில் உள்ள சில வாா்த்தைகள் இஸ்லாமிய மத போதனைகளின்படி ஏற்கத்தக்கதாக இல்லை’ என்று சமாஜவாதி எம்.பி. ஜியாவுா் ரஹ்மான் பா்க் அண்மையில் பேசினாா். அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய ஜின்னா உருவாகிவிடக் கூடாது: இது தொடா்பாக யோகி ஆதித்யநாத் மேலும் பேசுகையில், ‘இந்திய நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் நாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாடுபட வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம். ஆனால், சமாஜவாதி எம்.பி. ஒருவா் தேசிய பாடலுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற நபா்கள் தேசத் தலைவா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டாா்கள். ஆனால், பிரிவினைவாத தலைவா்களை கௌரவிக்கும் நிகழ்வுகளில் வெட்கமே இன்றி பங்கேற்பாா்கள்.

ஏற்கெனவே பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதம் உள்ளிட்டவை நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதில் இதுபோன்ற தீய எண்ணம் கொண்டவா்கள் சரியாக அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். ஏனெனில் நாட்டில் புதிய ஜின்னாக்களை உருவாக்கும் சதியின் ஒரு பகுதியாக இவா்கள் திகழ்கிறாா்கள். இந்தியாவில் மீண்டும் ஒரு ஜின்னா உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும். தேசவிரோத சக்திகள் வேருன்றும் முன்பே அகற்றப்பட வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com